ரயில்வே தொழில்நுட்ப பணியிடங்களுக்கான கிரேடு 3 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 28-ஆம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிலுள்ள ஐடிஐ-களில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 25-ஆம் தேதிதான் தேர்வு முடிவு வெளியாவதால், விண்ணப்பம் செய்வதற்கான தேதியை நீட்டிப்புச் செய்ய ரயில்வே தேர்வு பயிற்றுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரயில்வே தேர்வு வாரியம் மூலமாக நடைபெறும் தேர்வுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்தோரின் பங்களிப்பு மிகக் குறைவாக உள்ள நிலையில், அதனை அதிகரிப்பதற்காக ரயில்வே தேர்வு பயிற்றுநரான பாண்டுரங்கன் மற்றும் திருஞானசம்பந்தம் என்ற இளைஞர்கள் பெரு முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ரயில்வே தொழில்நுட்ப பணியிடங்களுக்கான கிரேடு 3 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 28-ஆம் தேதி கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிலுள்ள ஐடிஐ-க்களில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 25-ஆம் தேதிதான் வெளியாகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ரயில்வே தொழில்நுட்ப பணியிடங்களுக்கான கிரேடு 3 தேர்வினை எழுத முடியாத நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பாண்டுரங்கன் அளித்த பேட்டியில், ‘கடந்த 2024ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை ஐடிஐ கல்வி தகுதியின் அடிப்படையில் 7 ஆயிரத்து 602 பணியிடங்கள் ரயில்வேயில் தமிழ்நாட்டிற்காக வரவுள்ளது. இதில் 734 பணியிடங்கள் மட்டும் தமிழ்நாட்டிலுள்ள பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் மேற்கண்ட பழங்குடியினருக்கான பணியிடங்களில் 25 பேர் கூட ரயில்வேயில் சேரவில்லை. உதவி லோகோ பைலட்டுகளுக்கான தேர்வில் பழங்குடியினருக்கு முதல் நிலையில் வந்த கட்-ஆஃப் மதிப்பெண் 25. 2ஆவது நிலையில் வந்த கட்-ஆஃப் மதிப்பெண் 31. மிகக் குறைவான கட்-ஆஃப் இருந்தும்கூட பழங்குடியின மாணவர்கள் ரயில்வே பணிகளுக்கான தேர்வெழுதி ரயில்வே பணிகளுக்கு போகாமல் இருப்பதற்கு காரணம், ரயில்வே தேர்வுகள் குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லாததே.
தற்போது ரயில்வேயின் தொழில்நுட்ப பணிகளுக்கான கிரேடு 3 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் அனுப்ப கோரப்பட்டுள்ளது. இதற்கான கல்வித் தகுதி ஐடிஐ. இந்நிலையில் இதற்கு விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 28 ஆகும். இக்குறிப்பிட்ட தேர்வில் ஆர்ஆர்பி சென்னைக்கு 1347 பணியிடங்களும், இதில் பழங்குடியினருக்கு மட்டும் 200 பணியிடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பழங்குயினருக்கான பணியிடங்களை முழுவதும் தமிழகத்தைச் சேர்ந்த பழங்குடி மாணவர்கள் பெறுவதற்கான முயற்யில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.
பழங்குடியின மாணவர்களின் மேம்பாட்டிற்காக மட்டும் தமிழ்நாட்டில் ஆறு ஐடிஐ-க்கள் இயங்கி வருகின்றன. இதில் பயிலும் மாணவர்களை மேற்குறிப்பிட்ட ரயில்வே தேர்வில் பங்கெடுக்க வைக்கவும், தேர்ச்சி பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ளவும் நாங்கள் முழுமூச்சுடன் களமிறங்கியுள்ளோம். இதற்காக இந்த மாணவர்களிடம் ஒரு பைசாகூட கட்டணம் வாங்காமல் இந்த சேவையை மேற்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். அப்பணியிடங்கள் அனைத்தையும் தமிழ்நாட்டிலுள்ள பழங்குடியின மாணவர்களுக்கே கிடைக்கும் வகையில் எங்களால் உழைப்பையும் அவர்கள் வெற்றி பெறுவதற்கான பயிற்சியையும் வழங்க முடியும்.
இதற்கு எங்களது வேண்டுகோள் என்னவென்றால், தற்போது மேற்கண்ட பழங்குடியின ஐடிஐ-க்களில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களால் மேற்கண்ட ரயில்வே தேர்வை எழுத முடியாத நிலை. காரணம் வருகின்ற ஜூலை 28ஆம் தேதியுடன் தொழில்நுட்ப பணிகளுக்கான கிரேடு 3 தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதி முடிவடைகிறது. ஆனால் ஐடிஐ பயிலும் மாணவர்கள் அடுத்த மாதம், அதாவது ஆகஸ்ட் 28-ஆம் தேதிதான் அவர்களுக்கு ஐடிஐ தேர்வு முடிவுகள் வருகின்றன.
ஆகையால் வெறும் ஒரு மாத இடைவெளியால் இந்த ஆண்டு ஐடிஐ நிறைவு செய்யும் மாணவர்கள் ஓராண்டு காத்திருந்து அடுத்த ஆண்டுதான் மேற்கண்ட தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இயலும். ஆகையால், தமிழக முதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த விசயத்தை ரயில்வே துறையின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இந்த ஆண்டு படிப்பை நிறைவு செய்யும் மாணவர்களுக்காக விண்ணப்பிப்பதற்கான தேதியை நீட்டிப்புச் செய்ய வேண்டும் அல்லது அவர்களும் இந்த முறையே விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட ஆவன செய்ய வேண்டும்’ என்றார்.