புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் சுற்றுலாத்துறை சார்பில் முருங்கப்பாக்கம் கைவினை கிராமத்தின் ஆற்றின் பின்புறம் உள்ள மாங்குரோவ் காடுகள் வழியாக, அரிக்கன்மேடு பகுதிக்கு சுற்றுலா படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.

இங்கு இயக்கப்படும் படகுகளுக்கு சுற்றுலாத்துறை கைவினை கிராம மேலாளரிடம் அனுமதி பெற வேண்டும். மாங்குரோவ் காடுகள் வழியாக சுற்றுலா படகுகள் இயக்க மீனவர் ஒருவர் விண்ணப்பித்து இருந்தார். அனுமதி கிடைக்க காலதாமதம் ஆனதால் கைவினை கிராம மேலாளர் பாஸ்கரனை வீட்டில் சந்தித்த அவர் 2 கிலோ எடை கொண்ட மீன் கொடுத்து அதோடு சேர்த்து லஞ்சமாக பணத்தையும் கொடுக்கிறார், இதனை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர்.
அதிகாரி லஞ்சம் பெறும் அந்த வீடியோவில் உங்களுக்கு அனுமதி கொடுப்பது எளிதுதான். வம்பாகீரபாளையத்தில் அனுமதி பெறுவதுதான் கஷ்டம் என அதிகாரி பேசுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.
ஏற்கனவே புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் காரைக்காலில் லஞ்சம் வாங்குவதும், காரைக்காலில் எஸ்ஐ ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்குவதும் புதுச்சேரி பத்திரப்பதிவு துறையில் சார்பதிவாளர் கழிவறையில் லஞ்சம் பெற்ற வீடியோ வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது படகு இயக்க அனுமதிக்கு அதிகாரி லஞ்சம் பெறும் வீடியோ வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து, அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் வீடியோக்கள் வெளியாகி வருவது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.