கரூர் மாவட்டம், குளித்தலையில் சண்முகா நர்சிங் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு படித்து வந்த நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையை அடுத்த தீவெட்டுகாட்டுப்பட்டியை சேர்ந்த பாதிக்கப்பட்ட சிறுமியை அந்த கல்லூரியின் முதல்வரான செந்தில்குமார் (வயது 53) பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2022ம் ஆண்டு மாணவி கொடுத்த புகாரில் போக்சோ வழக்கு பதிவு செய்து கல்லூரி முதல்வரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்சமயம் வரை செந்தில் குமார் திருச்சி மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்து வருகிறார்.

இது தொடர்பான வழக்கு கரூர் கூடுதல் அமர்வு மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இன்று நர்சிங் கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார் குழந்தைகளுக்கு எதிரான பாலியன் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 23 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 7 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்கவும் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் (மகிளா நீதிமன்றம்) நீதிபதி தீர்ப்பளித்தார்.