டீ கடைகளில் இனி செய்தித்தாள்களில் வடை, பஜ்ஜி போன்ற எண்ணெய் பதார்த்தங்களை கொடுக்கக் கூடாது என உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடியாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உணவு கட்டுப்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..,
எண்ணெயில் பொரித்த உணவுப் பொருட்களான பஜ்ஜி, வடை, போண்டா, முறுக்கு போன்ற தின்பண்டங்களை அச்சடிக்கப்பட்ட காகிதம், செய்தித்தாள்கள், பிளாஸ்டிக் பேப்பர்களில் கட்டிக் கொடுக்கக் கூடாது என உணவு பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.
மேலும் விற்பனையாகாமல் மீதமாகும் உணவை நுகர்வோருக்கு வழங்காமல், அப்புறப்படுத்த வேண்டும் என்றும், உணவு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மஞ்சள் காமாலை, டைபாய்டு உள்ளிட்ட தடுப்பூசியை செலுத்தி இருக்க வேண்டியது அவசியம் என உணவு பாதுகாப்புத் துறை கூறியுள்ளது. மேலும் உணவு நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரை பகுப்பாய்வு செய்து, அறிக்கை வைத்திருக்க வேண்டும். உணவுப் பொருட்களை ஈக்கள் வைக்காத வண்ணம் கண்ணாடி பெட்டியில் மூடி வைக்க வேண்டும் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளும் கூறப்பட்டுள்ளது.
இது மட்டுமில்லாமல், உணவு வணிகர்கள் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும், எண்ணெயை ஒருமுறை மட்டுமே சமைக்க வேண்டும், மீதமான உணவு எண்ணெய் அங்கீகரிக்கப்பட்ட கொள்முதலாளர்களுக்கு மட்டுமே விற்க வேண்டும். அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக் பைகளில் உணவுப் பொருட்களை சூடாகவோ அல்லது இயல்பு நிலையிலோ பொட்டலம் போடுவதை தவிர்க்க வேண்டும். உணவகங்களில் உணவு பரிமாற வாழை இலை அல்லது அனுமதிக்கப்பட்ட பார்ச்மெண்ட் பேப்பர் அலுமினியம் பாயில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
உணவை கையாளுபவர்கள் கையுறை, தலைமுடி கவசம் அணிந்திருக்க வேண்டும். சமைக்க மற்றும் உணவு தயாரிக்க அயோடின் கலந்த உப்பு மட்டுமே இருக்க வேண்டும். அயோடின் கலக்காத உப்பை உணவகங்களில் வைத்திருத்தல் கூடாது. சிக்கன் 65, கோபி 65, பஜ்ஜி போன்ற பொருட்களில் செயற்கை நிறமிகள் சேர்க்கக்கூடாது. பொட்டலம் இடப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் பொழுது FSSAI உரிம எண்ணுடன் கூடிய முழுமையான லேபிள் விபரங்கள் இருக்க வேண்டும் போன்ற 14 முக்கிய வழிகாட்டுதல்களை உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிட்டுள்ளது.
உணவகங்கள் இந்த அறிவிப்பை கண்ட 14 நாட்களுக்குள் மேற்கூறிய நெறிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நியூஸ்பேப்பரில் எண்ணெய் பதார்த்தங்களை தரக்கூடாது
