மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே கிட்டப்பா அங்காடியில் நகர திமுக சார்பில் திமுக முன்னாள் தலைவர் திரு மு.கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அமைச்சர் மெய்யநாதன், திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம் எல் ஏ, மயிலாடுதுறை நகர மன்ற தலைவர் குண்டாமணி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்று பொதுமக்களுக்கு விலை இல்லாத தென்னங்கன்றுகளை வழங்கினர். பேருந்துகள் வெளியே வந்து செல்லும் முக்கிய வாயில அருகே நடைபெற்ற விழா காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில் வாகனங்கள் நெருக்கடியான நிலையில் நின்று கொண்டிருந்தன. ஆனால் இதனைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் உடன்பிறப்புகள் கருமமே கண்ணாக தென்னங்கன்றுகளை வழங்கி வந்தனர். இதன் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் இருந்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் சிக்கித் தவித்தன.

இது தொடர்பாக போக்குவரத்து காவலர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் போக்குவரத்தை சரி செய்ய முடியவில்லை. 20 நிமிட நேரம் ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்தில் சிக்கித் தவித்த பின்னர் அங்கிருந்து வெளியாகி திருவாரூர் நோக்கி சென்றன. ஆம்புலன்ஸ் அவசரத்தில் முதல் அரை மணி நேரம் என்பது மிகவும் முக்கியமான கோல்டன் அவர் என்று கூறப்படும் காலமாகும். பொதுமக்கள் உயிரைப் பற்றி கவலைப்படாமல் திமுகவினர் கொண்டாடிய நிகழ்ச்சி பொதுமக்கள் இடையே முகசுளிப்பை ஏற்படுத்தியுள்ளது.