ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள நகை கடன்களுக்கான புதிய விதிமுறைகள் எளிய மக்களை கடுமையாக பாதிக்க கூடியது. ஒன்றிய நிதி அமைச்சருக்கு மதுரை பாராளுமன்ற உறுப்பினர் கோரிக்கை மனு கோரிக்கை மனு விவரம்
ஒன்றிய நிதியமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீத்தாராமன் அவர்களை சந்தித்து சு. வெங்கடேசன் எம் பி மனு.
நகைக்கடன் பெறுவது சம்பந்தமாக ரிசர்வு வங்கி புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது.நகைக்கடன் பெறும் போது “கடன் பெறுபவரின் திருப்பி செலுத்தும் திறனோடு பொருந்துகிறதா என்பதை உறுதி செய்வது அவசியம்” என ரிசர்வு வங்கியின் புதிய நிபந்தனை கூறுகிறது. பெரும்பாலான நகைக் கடன்தாரர்கள் தினக்கூலிகளாக, நிலையான மாதச் சம்பளம் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் வருமானத்திற்கான ஆவணச் சான்றை காண்பிப்பது என்பது இயலாததாகும். அதுமட்டுமல்ல நகைக் கடனை பொறுத்தவரையில் அது 100% பாதுகாக்கப்பட்ட கடன் ஆகும். ஆகவே கடன் தாரரின் திரும்பச் செலுத்தும் திறனை ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியம் என்ன?

அடுத்ததாக “தங்க நகையின் மீதான மூல ரசீதோ அல்லது உடமை உரிமை ஆவணமோ அவசியம் என்கிறது” புதிய விதிமுறை. தங்க நகைகள் என்பது பல பத்தாண்டுகளாகவோ அல்லது இரண்டு மூன்று தலைமுறையாகவோ இருந்து வரும் நிலையில் மூல ரசீதுக்கோ அல்லது உடமை உரிமை ஆவணமோ பெறுவது எளிதல்ல.
நகைக்கடன் என்பது எளிய, நடுத்தர மக்கள் கடன் பெறுவதற்கான கடைசி புகலிடமாகும். வங்கிகளைப் பொறுத்த வரை நூறு சதவிகிதம் லாபம் ஈட்டுதல் மட்டுமல்ல வராக்கடன் என்கிற பிரச்சனையே இதில் இல்லை. அப்படி இருக்கும் சூழலில் நகைக்கடன் மீது புதிதாக இவ்வளவு கடுமையான விதிமுறைகளை ரிசர்வு வங்கி ஏன் விதித்துள்ளது.
ரிசர்வு வங்கி வெளியிட்டுள்ள குறிப்பில் கருத்துகள் பெறுவதற்கான நகல் என்று சொல்லிவிட்டு, அடுத்த பாராவில் “இந்த உத்தரவு உடனடியாக அமுலுக்கு வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.
வங்கிகளை பொறுத்தவரை நூறு சதவிகித பாதுகாப்பானது, வராக்கடன் என்பது துளியும் இல்லாத ஒன்று நகைக்கடன். அதனால் தான் இது சம்பந்தமாக வங்கிகளிடமிருந்து எந்த புகாரும் இல்லை. அது மட்டுமல்ல கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக நகையின் விலை கூடிக்கொண்டே தான் இருக்கிறதே தவிர குறையவே இல்லை. அப்படியிருக்கும் சூழலில் நகைக்கடன் சார்ந்து இவ்வளவு கடுமையான விதிமுறைகளை, அவசர அவசரமாக ரிசர்வு வங்கி விதிப்பதென்பது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகும்.
கோடிக்கணக்கான மக்களின் நலனுக்கு எதிரானதாக உள்ள ரிசர்வு வங்கியின் நகைக்கடன் தொடர்பான புதிய நிபந்தனைகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கீழ்க்கண்ட மனுவினை அளித்தேன். மனுவில் உள்ள விபரங்களை கேட்டறிந்த நிதியமைச்சர் இதன் மீது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

நிதியமைச்சரிடம் கொடுத்த மனுவின் தமிழாக்கம்; பெறுநர் மான்புமிகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், புது டெல்லி மான்புமிகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு,
பொருள்: ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள நகை கடன் விதிமுறைகள் – கடும் நிபந்தனைகளை நீக்க கோரி,
கோடிக்கணக்கான மக்களை குறிப்பாக ஏழைகள், கீழ்த்தட்டு நடுத்தர வர்க்க பெண்கள், விவசாயிகளை பாதிக்கக்கூடிய மேற்காணும் பிரச்சனையை உங்களின் உடனடி கவனத்திற்கும் தீர்வு காண்பதற்கும் கொண்டு வருகிறேன்.
நகை கடன் என்பது சாதாரண கடன்தாரரின் கடைசி புகலிடமாகும். அவசர செலவுகளுக்காக எல்லா வழிகளும் அடைபட்ட நிலையில் பயன்படுத்தக் கூடியதுமாகும். மேலும் நகை கடன் வழங்குவதால் வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு வராக் கடன் என்ற பிரச்சினையே கிடையாது. மேலும் நகை கடன் என்பது அதிக லாபம் ஈட்டும் துறை ஆகும். ஆகவே நகை கடன் நிபந்தனைகள் நெகிழ்வானதாகவும், கடனாளிகளுக்கு சாதகமாகவும் இருக்க வேண்டும். ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட விதிமுறைகள், 1964 முதல் 2013 வரையிலான 59 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட 32 சுற்றறிக்கைகளுக்கு மாற்றான விரிவான தொகுப்பு என்ற பெயரால், மிகக் கடும் நிபந்தனைகளை தங்கக் கடன் வாங்குபவர்கள் மீது விதித்துள்ளது.
இந்த வழிகாட்டல்களின் தலைப்பு “கருத்துக்கள் பெறுவதற்கான நகல்” என்று இடப்பட்டு இருந்தாலும் பத்தி B (4) “இந்த உத்தரவுகள் வாயிலாக தரப்படும் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது” என்று குறிப்பிடப்பட்டு இருப்பது முரண்பாடாக உள்ளது.
கடன் : மதிப்பு விகிதம் (Loan to Value) ஏற்கெனவே உள்ள 80 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக குறைக்கப்பட்டு இருப்பதாக அறிகிறேன். இது கடன் அளவைக் குறைத்து எதிர்மறை விளைவை உருவாக்கும். கடன் காலம் ஓராண்டு மட்டுமே என்பதால் கடன் : மதிப்பு விகிதம் 85 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும்.
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டல்களில் உள்ள 11 வது பிரிவு “முறையான கடன் தகுதி பரிசீலனை மற்றும் கூர் ஆய்வு எல்லா விண்ணப்பங்களின் மீதும் நடத்தப்பட்டு, வழங்கப்படும் கடன் கடன்தாரரின் திரும்பச் செலுத்தும் திறனோடு பொருந்தியுள்ளதா என உறுதி செய்வது அவசியம்” என்று கூறுகிறது. தங்கக் கடனை பொறுத்தவரையில் அது 100% பாதுகாக்கப்பட்ட கடன் ஆகும். ஆகவே கடன் தாரரின் திரும்பச் செலுத்தும் திறனை ஆய்வு செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? ஆகப்பெரும்பாலான தங்கக் கடன்தாரர்கள் தினக்கூலிகளாக, நிலையான மாதச் சம்பளம் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் வருமானத்திற்கான ஆவணச் சான்றை காண்பிப்பது என்பது இயலாததாகும். ஆகவே இந்த நிபந்தனை, ரிசர்வ் வங்கியின் விதி முறைகளை முறையாக அமலாக்கக் கூடிய பொதுத்துறை வங்கிகள், கிராம வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றிடம் இருந்து கடன்தாரர்களை கந்து வட்டிக்காரர்களை நோக்கி தள்ளக் கூடியதாகும். எனவே இந்த பிரிவு நீக்கப்பட வேண்டும்.
வழிகாட்டல்களில் 12 வது பிரிவு கூறுவது: எல்லா வருமான ஈட்டல் கடன்களுக்கும் மற்றும் கடன் வழங்கும் நிறுவனம் தீர்மானிக்கும் அளவுக்கு மேலான நுகர்வு கடன்களுக்கும் இறுதிப் பயன்பாட்டு ஆவணச் சான்று கட்டாயமானதாகும்”. அவசர தேவைகளுக்காக வாங்கப்படும் நுகர்வு கடன்களுக்கு வரம்புகளை தீர்மானிக்க கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு சுதந்திரம் உண்டு. வருமான ஈட்டல் கடன்களில் விவசாயக் கடனும் அடங்கும். இப்படியிருக்கையில் எல்லா விவசாய கடன்தாரர்களும், நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்கு மேலான நுகர்வு கடன்தாரர்களும் அவர்களின் சொந்தக்கணக்கிற்கு நேரடியாக கடன் தொகையை பெற இயலாத சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.
கடன் வழங்கும் நிறுவனங்கள், கடன் தொகையை எந்த நிறுவனங்களிடம் இருந்து கடன்தாரர்கள் பொருட்களை வாங்குகிறார்களோ, அந்த நிறுவனங்களுக்கு செலுத்தி விடுகிறோம் என்ற நிலையை எடுக்கக்கூடும். இந்த நிபந்தனை, விவசாயிகளின் மற்றும் நுகர்வோர்களின் நலன்களை கடுமையாக பாதிக்கும். கடன் தொகையை தங்களின் தேவைக்கேற்ப பயன்படுத்த இயலாத நிலை ஏற்படும். ஆகவே இந்த நிபந்தனையும் நீக்கப்பட வேண்டும்.
பிரிவு 13 புதுப்பித்தல் கடனுக்கும், கூடுதல் கடனுக்கும், புதிதாக கடன் தகுதி பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறது. இதனால் கடன் வழங்கும் நிறுவனங்கள் புதிதாக நகை மதிப்பீடு மற்றும் செயல்முறை கட்டணங்களை செலுத்துமாறு நிர்பந்திக்கக்கூடும். இது கடன் தாரர்கள் மீது தேவையற்ற சுமையை ஏற்றுவதாகும். ஆகவே புதிய கடன் தகுதி ஆய்வுக்கு கூடுதல் கட்டணங்களை கடன் தாரர்கள் மீது விதிக்கக்கூடாது என்று வலியுறுத்தப்பட வேண்டும்.
பிரிவு 16, உடமை உரிமை பற்றியதாகும். அது கீழ்க்காணும் நிபந்தனையை உள்ளடக்கி உள்ளது. “கடன் வழங்குபவர்கள் பிணைப் பொருள் மீதான உடமை உரிமையை பரிசோதித்ததற்கான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். பிணையாக வைக்கக்கூடிய தங்கத்தை வாங்கியதற்கான மூல ரசீதுகள் இல்லாத பட்சத்தில், எவ்வாறு உடமை உரிமை தீர்மானிக்கப்பட்டது என்பதற்கான, பொருத்தமான ஆவணம்/உறுதிமொழி கடன்தாரரிடம் பெறப்பட வேண்டும்”. நகைகள் தனி நபர்களிடம் பல பத்தாண்டுகளாய் இரண்டு மூன்று தலைமுறைகளாய் இருந்து வரும் என்பதும், அதற்கான மூல ரசீதுகள் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பதும் பொதுவாக அறியப்பட்டதே ஆகும்.
ஆகவே “தங்கம் வாங்கியதற்கான மூல ரசீதை கோருவது” எளிய மக்களுக்கு பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் கடன் வழங்கப்படுவதை மறுப்பதை நோக்கமாகக் கொண்டதே என்ற அச்சம் எழுந்துள்ளது. மூல ரசீதுகள் இல்லாத பட்சத்தில் மாற்று ஆவணங்கள் கோருவது என்பதும் சிக்கலான வழிமுறை ஆகும். இந்த நிபந்தனையும் நீக்கப்பட வேண்டும். இதற்கு மாறாக தற்போதுள்ள கடன் விண்ணப்பத்தின் அங்கமாக இருக்கிற சுய உறுதிமொழி முறையே தொடர வேண்டும்.
பிரிவு 21 இல் கூறியுள்ளபடி தங்க நாணயங்கள் பிணையாக வைக்கப்படும் பட்சத்தில் அவை வங்கிகளால் விற்கப்பட்டதாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்பட வேண்டும்.
பிரிவு 25 (iii) ல் “கடன் கால முடிவில் ஒரே முறையாக செலுத்தப்படும் கடன்களுக்கான “கடன்- நகை மதிப்பு விகிதம்” கணக்கிட, துவக்கத்தில் வழங்கப்படும் கடன் அளவிற்கு மாறாக, முதிர்வு காலத்தில் கடன்தாரரால் செலுத்தப்படும் மொத்த அளவை பொறுத்தே கணக்கிடப்படும்” என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இது கடன்தாரரை கடுமையாக பாதிக்கும். துவக்கத்திலேயே எதிர்கால வட்டியும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதால் “கடன் – நகை மதிப்பு அளவு” குறைந்து விடும். ஆகவே இந்த நிபந்தனையும் நீக்கப்பட வேண்டும்.
வழிகாட்டல்களில் உள்ள பிரிவு 45 “கடன் வழங்கும் நிறுவனங்கள் தங்கள் கிளைகளிலேயே பிணையாக வழங்கப்படும் நகைகளை, அதற்கு ஏற்ற பாதுகாப்பான சேமிப்பு பெட்டகங்களில் வைத்திருக்க வேண்டும்; சம்பந்தப்பட்ட நிறுவன ஊழியர்களே அதை நிர்வகிக்க வேண்டும்” என்று மிகத் தெளிவாக கூறுகிறது. அதே நேரத்தில் பிரிவு 49, “முழுக் கடன் திரும்பச் செலுத்தப்பட்ட பின்னர் அதிகபட்சம் ஏழு வேலை நாட்களுக்குள்ளாக கடன் வழங்கும் நிறுவனங்கள் பிணையாக வைக்கப்பட்ட தங்கத்தை திரும்பவும் கடன்தாரர்கள்/ வாரிசுதாரர்கள் வசம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்” என்று கூறுகிறது.
பிணையாக வைக்கப்பட்ட தங்கம் அதே வங்கிக் கிளையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் போது எதற்காக ஏழு வேலை நாட்கள் திரும்ப ஒப்படைப்பதற்கு தேவைப்படுகிறது? இது அபாயகரமான பிரிவாகும். முழுக் கடனும் திரும்பச் செலுத்தப்பட்ட நாளுக்கும், திரும்ப பிணை நகை ஒப்படைக்கப்படும் நாளுக்கும் இடையில் சில முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது. ஆகவே இந்த பிரிவு நீக்கப்பட வேண்டும். கடன் திரும்பச் செலுத்தப்பட்ட நாளன்றே உடனடியாக பிணை நகை திரும்பத்தரப்பட வேண்டும்.
மொத்தத்தில் புதிய நகல் விதிமுறைகள், ஏற்கனவே விலைவாசி உயர்வு, வேலையின்மை, குறைந்த வேலை, விவசாயத்திற்கும், சிறு குறு நடுத்தர தொழில்களுக்கும் ஆதரவின்மை போன்ற காரணிகளால் பாதிக்கப்பட்டுள்ள, சாமானிய மக்களின் வாழ்க்கையில் மேலதிக துயரங்களை கொண்டு வந்து சேர்ப்பதாகும். அனைத்து எதிர்மறை நிபந்தனைகளும் திரும்பப் பெறப்படா விட்டால் அவர்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆட்படுவதோடு, கந்துவட்டிக்காரர்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், சிறு நிதி வங்கிகள் ஆகியவற்றை நோக்கி தள்ளப்பட்டு விடுவார்கள். இந்த நிறுவனங்கள் எல்லாம் ஒரு புறம் அதீத வட்டி விதிப்பதோடு, மறுபுறம் ரிசர்வ் வங்கி விதிமுறைகளை சற்றும் லட்சியம் செய்யதவை ஆகும்.
ஆகவே தாங்கள் இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு, அனைத்து எதிர்மறை நிபந்தனைகளையும் திரும்பப் பெறுமாறு இந்திய ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என கோரிக்கை மனுவாக ஒன்றிய நிதி அமைச்சரிடம் கடிதம் கொடுத்துள்ளேன்.