• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ராட்டினங்கள் அமைக்க உத்தரவிட கோரிக்கை..,

ByAnandakumar

May 20, 2025

கரூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத உற்சவ விழா விமரிசையாக நடப்பது வழக்கம். இதையொட்டி மாரியம்மன் கோவிலில் கம்பம் நடுவதும், பின்னர் அதற்கு வழிபாடு நடத்தி ஆற்றில் விடும் நிகழ்ச்சியும் சிறப்பானதாகும். அந்த வகையில், இந்த ஆண்டு திருவிழா கடந்த 11-ந்தேதி தொடங்கியது. நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றில் விடுதல் நிகழ்ச்சி வருகின்ற 28-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி கரூர் அமராவதி ஆற்றில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கூடுவது வழக்கம். குறிப்பாக திருவிழாவை ஒட்டி அமராவதி ஆற்றில் ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் அமைத்து வருகின்றனர். பொதுமக்கள் அங்கு சென்று குடும்பத்துடன் கேளிக்கையில் ஈடுபடுவர்.

கடந்த ஆண்டு கடுமையான மழைப்பொழிவு காரணமாக மண்ணில்
கெட்டித் தன்மை இல்லாத காரணத்தால் பிரம்மாண்ட ராட்டினங்கள் அமைக்க அனுமதி மறுக்கப்பட்டு, சிறிய அளவிலான பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டும் இடம்பெற்றன. இதேபோல் இந்த ஆண்டும் கடந்த ஓரிரு தினங்களாக கரூர் மாவட்டத்தில் மழைப்பொழிவு அதிகமாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக காற்றும் பலமாக வீசி வருகிறது.

குறிப்பாக கடந்த 2003 ஆம் ஆண்டு கரூரில் வீசிய சூறாவளிக் காற்றில் ராட்சத ராட்டினம் கவிழ்ந்து விழுந்ததில் 10 பேர் பரிதாபமாகஉயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மண்ணில் கெட்டித்தன்மை இல்லாத காரணத்தால் தான் அந்த விபத்து நடைபெற்றதாக அப்போது கூறப்பட்டது.

அதேபோல் இந்த ஆண்டும் மழை பெய்து வருவதால் அதிகாரிகள் மண்ணின் கெட்டித் தன்மையை ஆய்வு செய்த பின்னர் ராட்சத ராட்டினங்கள் அமைக்க உத்தரவிட வேண்டும் என்றும், உரிய அனுமதி பெறாமலே ராட்டினங்கள் அமைக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய ஆய்வுக்குப் பின்பு ராட்டினங்கள் அமைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.