விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கங்கர் சேவல், தெற்கு ஆனை கூட்டம் , எட்டக்காபட்டி, காக்கி வடான்பட்டி, விளாம்பட்டி, எதிர்க்கோட்டை, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளை பூசணிக்காய் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
கிணற்று பாசனத்தில் குறைந்த செலவில் நல்ல வருமானத்தை தருவதால் தொடர்ந்து வெள்ளை பூசணிக்காய் பயிரிடப்பட்டு வருகிறது. மூன்று மாதப் பயிரான வெள்ளை பூசணிக்காய் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.வெள்ளை பூசணிக்காய் விற்பனைக்கு திருநெல்வேலி, சிவகாசி, சந்தைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. வெள்ளை பூசணிக்காய் சமையலுக்கு மட்டுமின்றி திருஷ்டி சுத்தி போடுவதற்காக பயன்படுத்தப்படுவதால் இதனை திருஷ்டிக்காய் , தடியங்காய்,எனவும் அழைக்கப்படுகிறது.

கடந்த மாதம் வரை பூசணிக்காய் கிலோ ரூபாய் 10 ஆக இருந்தது. தற்போது ஐந்து ரூபாய்க்கும் குறைவானதால் காய்களைப் பறித்தால் கூலி கொடுக்க கூட கட்டுபடியாகாது என்பதால் யாரும் இதனை பறிக்கவில்லை. இதனால் தோட்டத்தில் பறிக்கப்படாமலேயே வீணாகி வருகிறது.
கங்கர் சேவல் விவசாயி ராமசாமி கூறியது,
வெள்ளை பூசணிக்காய் விசேஷ தினங்கள் மற்றும் வார வாரம் வெள்ளிக்கிழமை தோறும் திருஷ்டிக்கு அதிகளவில் விற்பனைக்கு வாங்கி செல்கின்றனர். ஆனால் விலை திடீரென ஐந்து ரூபாய்க்கு குறைவானது. மேலும் வாங்கிச் சென்ற காய்கள் விற்பனையாகாமல் உள்ளதாக கடைக்காரர்கள் தெரிவித்ததால் தேவையும் ஏற்படாததால் பூசணிக்காய் பறிக்கப்படாமல் செடிகளில் விடப்பட்டன. சில விவசாயிகள் கால்நடைக்கு உணவாக கொடுத்து வருகின்றனர்.
சில சமயங்களில் தக்காளி, வெங்காயம், உள்ளிட்ட விளைபொருட்கள் வழக்கத்தை விட விலை அதிகரிக்கும் போது தமிழக அரசு பிற மாநிலங்களில் வரவழைத்து விலைகளை குறைத்து மக்களுக்கு கிடைக்க முயற்சி எடுத்து வருகின்றன. ஆனால் அதே சமயத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்து விளை பொருட்களுக்கு விலை மிகவும் குறையும்போது அரசு பாரா முகமாக இருந்து வருகிறது. இனிமேலாவது தமிழக அரசு விளைபொருட்கள் விலை குறையும்போது அதனை ஏற்று விவசாயிகளுக்கு உரிய விலையில் கிடைக்க நடவடிக்கை எடுத்தால் விவசாயிகள் வேதனைப்பட மாட்டார்கள் நஷ்டம் அடையவும் வாய்ப்பு இல்லை என கூறினார்.







; ?>)
; ?>)
; ?>)