தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பெருமாள் பகுதியை சேர்ந்தவர் நடிகரும் பிரபலமான ஜி பி முத்து. இவருக்கு சொந்தமான இடம் பெருமாள்புரம் பகுதியில் உள்ளது.
இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெருமாள்புரத்தில் கீழத்தெருவை காணவில்லை என நடிகர் ஜி.பி. முத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஜி பி முத்து ஊர் மக்களையும் ஊர் கோவிலையும் அவதூறாக பேசியதாக கூறி ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து என்று ஜி பி முத்துவின் வீட்டை முற்றுகையிடுவோம் என்று தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் குலசேகரன்பட்டினம் போலீசார் ஜி பி முத்துவின் வீட்டின் முன்பு காவலில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கோவில் முன்பு குவிந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த சமயத்தில் அங்கு ஜி பி முத்து வருகை தந்தார். ஜி பி முத்துப்புக்கும் கிராம மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கிராம மக்கள் ஜி பி முத்து ஒழிக என்று கோஷம் எழுப்பினர் இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் ஜிபி முத்துவை வீட்டிற்கு அழைத்து வந்தனர். அப்போது ஜிபி முத்து ஒழிக என்று அவரே கோஷமிட்டதால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பரபரப்பை குறைப்பதற்காக அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இது குறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில் ஜிபி முத்து விளம்பரத்திற்காக இதுபோல் செயலில் ஈடுபடுவதாகவும் கோவில் ஏற்கனவே இருந்த இடத்தில் தான் தாங்கள் கோவிலை புதுப்பித்து கட்டுவதாகவும் கீழத்தெரு காணவில்லை என்பது அவர் கூறுவது முற்றிலும் பொய் என்றும் கூறினார். இந்த கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்வதற்கான அனைத்து பணிகளையும் தொடர்ந்து செய்வதற்கு காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர்.
மேலும் இது குறித்து ஜிபி முத்து கூறுகையில் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களை ஒதுக்குவதாகவும் கோவில் இடத்திலும் கீழே தெருவையும் ஆக்கிரமித்து சிலர் வீடுகள் கட்டி உள்ளதாகவும் தெரிவித்தனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் தனது நான்கு குழந்தைகளுடன் தீக்குளிப்பேன் என்று ஜிபி முத்து தெரிவித்தார்.