காரைக்கால் அருகே போலி பிறப்பு சான்றிதழ் தயாரித்து ஒரு மாத பெண் குழந்தையை விற்பனை செய்த நகராட்சி ஊழியர் உட்பட 10 பேரை திருநள்ளாறு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காரைக்கால் அடுத்த திருநள்ளாறு கருக்கங்குடியில் உள்ள ஒரு தம்பதிக்கு பத்தாண்டுகளுக்கு மேலாக குழந்தை இல்லாததால் தமிழகத்திலிருந்து புரோக்கர்கள் மூலம் ஒரு மாத பெண் குழந்தையை 50,000 ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக திருநள்ளாறு காவல் நிலையத்திற்கு புகார் வந்தது.

இதனை அடுத்து திருநள்ளாறு போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தமிழக பகுதியில் இருந்து ஒரு மாத பெண் குழந்தையை 50,000 ரூபாய்க்கு வாங்கியதாக தெரியவந்தது. இதனை அடுத்து ஒரு மாத பெண் குழந்தை விற்பனை செய்த கும்பல், குழந்தை வாங்குவதற்கு உதவியவர்கள் மற்றும் தமிழகத்தில் பிறந்த ஒரு மாத பெண் குழந்தைக்கு காரைக்கால் மாவட்டத்தில் பிறந்தது போல் காரைக்கால் நகராட்சியில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி பிறப்புச் சான்றிதழ் எடுத்துக் கொடுத்த நகராட்சி ஊழியர் உட்பட 10 பேரை திருநள்ளாறு போலீசார் கைது செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் ஆதர படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
இதேபோன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் குழந்தை விற்பனை நடைபெறுகிறதா என்று காரைக்கால் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். மேலும் விற்பனை செய்யப்பட்ட ஒரு மாத பெண் குழந்தையை போலீசார் மீட்டு குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் பிறந்த ஒரு மாத பெண் குழந்தைக்கு காரைக்கால் மாவட்டத்தில் பிறந்தது போல் போலி பிறப்பு சான்றிதழ் தயாரித்து 50,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்துள்ளது.