அட்டாரி வாகா எல்லை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் அந்த வழியாக வெளியேறலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2025 ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதல் ஒட்டுமொத்த உலகையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த தாக்குதல் இந்தியாவில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ரெசிஸ்டென்ஸ் பிரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
அதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி நடவடிக்கையை எடுத்தது. அதில், ஒன்று தான், அட்டாரி வாகா எல்லையை மூடல். ஏப்ரல் 30ஆம் தேதி அட்டாரி வாகா எல்லை மூடப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. மேலும், ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானிய மக்கள் அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு செல்லலாம் எனவும் தெரிவித்திருந்தது.
இதற்கிடையே, ஏப்ரல் 30ஆம் தேதிக்கு பிறகு எல்லையை மூடுவதாக மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது நீடிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை பாகிஸ்தான் மக்கள் அட்டாரி வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பாகிஸ்தான் மக்கள் பெருமூச்சு விட்டனர். ஏப்ரல் 24ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை 926 பாகிஸ்தானியர்கள் தங்கள் நாட்டிற்கு சென்றுள்ளனர்.
அதே நேரத்தில் 1,841 பேர் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர். எனவே, தற்போது வாகா எல்லை திறக்கப்படுவதால், அதிகமான பாகிஸ்தான் மக்கள் இந்தியாவில் இருந்து வெளியேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 40 ஆண்டுகளாக இங்கு வசித்த மக்கள், கண்ணீர் மல்க இந்தியாவில் இருந்து வெளியேறி வருவது குறிப்பிடத்தக்கது.