விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவகாசியின் காவல் தெய்வமான அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வெள்ளி சிம்ம வாகனத்தில் பத்திரகாளியம்மன் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்க, பக்தர்களின் ஓம் சக்தி! பராசக்தி!!- என்ற சரண கோஷத்துடன், குலவை ஒலியோடு கொடியேற்றம் நடைபெற்றது. திருவிழா தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், தினந்தோறும் அம்மன் ரிஷப வாகனம் குதிரை வாகனம் அன்னபட்சி வாகனம் காமதேனு வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியருளும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளாக மே 6-ம் தேதி செவ்வாய்க்கிழமை பொங்கல் விழாவும், மறுதினம் மே 7-ம் தேதி புதன்கிழமை கயறு குத்து திருவிழாவும், 9-ம் தேதி வெள்ளிக்கிழமை தேரோட்டமும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.