தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் என கடந்த சில நாட்களாகவே தகவல் வெளியான நிலையில், தற்போது அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
விலைமாதருக்கும், வாடிக்கையாளருக்கும் நடக்கும் உரையாடலை, சைவ, வைணவ சமயங்களின் புனித குறியீடுகளுடன் ஒப்பிட்டு, வனத்துறை அமைச்சர் பொன்முடி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆபாசமாக பேசியது பெரும் சர்ச்சையானது. அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கக் கோரியும், தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், தனி வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதனால், நெருக்கடிக்கு ஆளாகியுள்ள பொன்முடியும், அதுபோல் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, ஜாமினில் விடுதலையான அடுத்த சில நாட்களில், அமைச்சரானார். அவருக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்யக்கோரி, அமலாக்கத்துறை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘அமைச்சராக இல்லை என்பதால் தான், செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டது. ‘இரு நாட்களில் மீண்டும் அவர் அமைச்சரானதை ஏற்க முடியாது. எனவே, அவருக்கு ஜாமின் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா?’ என, கேள்வி எழுப்பியது. அவர் அமைச்சராக தொடர்ந்தால் ஜாமின் ரத்து செய்யப்படும், அமலாக்கத்துறையால் மீண்டும் கைது செய்யப்படும் வாய்ப்பு உள்ளது, இதனால் கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்படும் எனக் கூறப்பட்டு வந்தது.


இந்நிலையில் அமைச்சரவையில் இருந்து மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அமைச்சர் பொன்முடியும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு மின்சாரத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துச்சாமிக்கு மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனுக்கு வனத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
