கம்பத்தில் டாஸ்மாக் கடை அருகே பால் வியாபாரிக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. முன்விரோதம் காரணமா என 5 பேர் கும்பலை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்பம் கெஞ்சையன் குளத்தைச் சேர்ந்தவர் சுதாகர் (29) இவர் நேற்று இரவு கம்பம் நெல்லு குத்தி புளியமரம் தெரு மின்சார வாரியம் அருகேயுள்ள டாஸ்மாக் கடை பகுதியில் தனியாக அமர்ந்திருந்தார். அப்போது அங்குவந்த 5பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சுதாகரின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதனைப் பார்த்து அந்த கும்பல் தப்பி ஓடினர். அப்பகுதியில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில், போலீசார் படுகாயமடைந்து, கிடந்த சுதாகரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்த உத்தமபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் முத்துலட்சுமி ,வனிதாமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் டாஸ்மாக் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி மற்றும் அப்பகுதியில் போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் நெல்லுகுத்தி புளியமரம் தெருவைச் சேர்ந்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டாஸ்மாக் கடை அருகே இரவில் பால் வியாபாரியை அரிவாளால் வெட்டிய சம்பவம் கம்பத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.