தேனி மாவட்டம் கூடலூர் கே.கே நகரை சேர்ந்தவர் பாண்டியராஜன், வழக்கறிஞர். இவரது மனைவி அம்பிகா (43) கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் நீதிமன்ற காவலராக பணிபுரிந்து வருகிறார்.

பாண்டியராஜன் உறவினருக்கும், கூடலூர் கேகே நகரை சேர்ந்த குபேந்திரன் என்பவருக்கும் நிலத்திற்கு செல்லும் பாதை சம்பந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு அம்பிகா பணி முடித்து கூடலூர் செல்வதற்காக, கம்பம் மெயின் ரோடு சிக்னல் அரசமரம் அருகே பேருந்திற்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த குபேந்திரன் (55) முன்விரோதம் காரணமாக அம்பிகாவை மறைத்து வைத்திருந்த அரிவாளால் தாக்கினார். அப்போது அம்பிகா தடுத்ததில் அவருக்கு கண்ணில் காயம் பட்டது. காயமடைந்த அம்பிகாவை, அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அப்பகுதியில் இருந்த பொதுமக்களும், போலீஸாரும் குபேந்திரனை பிடித்து கம்பம் தெற்கு காவல் நிலையம் கொண்டு சென்று ஒப்படைத்தனர். கம்பம் தெற்கு போலீசார் குபேந்திரன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாகவே அம்பிகாவை கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது. 24 மணி நேரமும் பரபரப்பாக இருக்கும் கம்பம் மெயின் ரோட்டில் இரவில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.