ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 34,790 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 33,377 கடைகள் கூட்டுறவு துறையால் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில், கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் 2 கோடி ரேஷன் தாரர்களுக்கு வழங்கப்படுகின்றன. இதன்மூலம் 7 கோடி மக்கள் பயன்பெறுகின்றனர். இந்தநிலையில் நியாய விலை கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்திருந்தனர்.
பொது விநியோக திட்டத்துக்கு தனித் துறை ஆறிவிக்க வேண்டும், நியாய விலை கடை ஊழியர்களுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் ஊதிய வழங்க வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஏப்ரல் 22) முதல் 24ஆம் தேதி வரை மூன்று நாட்கள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்தனர்.
அதன்படி இன்று ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் கூட்டுறவு சங்க பதிவாளர்கள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
அதில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ரேஷன் ஊழியர்களுக்கு சம்பளப் பிடித்தம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
நோ ஒர்க் நோ பே என்ற அடிப்படையில் போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்களின் சம்பளம் பிடிக்கப்படும். வேலைநிறுத்தத்தில் பங்கேற்றிருக்கும் பணியாளர்களின் விவரங்களை சேகரித்து பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பதிலாக உரிய மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ரேஷன் பொருள் விநியோகத்தில் எந்த இடர்பாடும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை
