புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள அரியாணிப்பட்டி கிராமத்தில் புதிய பறவை கபாடி குழு இளைஞர்கள் சார்பில் 49 வருடங்களாக கபாடி போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கபாடி மீது கொண்ட பற்றினால் அப்பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள், ஊர் முக்கியஸ்தர், புதிய பறவை கபாடி குழு இளைஞர்கள் சார்பில் அந்த கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலில் காப்பு கட்டியும் இளைஞர்கள் கைகளில் காப்பு கட்டியும் விரதம் இருந்து ஒன்றினைந்து கபாடி போட்டியை நடத்தி வருகின்றனர்.
ஒன்றரை இலட்சம் ரூபாய் மதீப்பீட்டில் கேலரி அமைத்தும் கபாடி ஸ்டேஜ் அமைத்தும் வாழை மரங்கள் கட்டி நுழைவு வாயில் வைத்து விழா குழுவினர் ஏற்பாடுகள் செய்திருந்தனர். கபாடி போட்டியில் முதல் பரிசாக ரூ 70,000, இரண்டாம் பரிசாக ரூ.50,000, மூன்றாம் பரிசு ரூ.30,000 ஆறுதல் பரிசுகள் ரூ.30,000 மற்றும் பத்து இலட்சம் மதிப்பிலான சிறப்பு பரிசுகள் சைக்கிள் பிரிட்ஜ்,வாசிங் மிசின், கட்டில், பீரோ, டிரசிங் டேபிள் மற்றும் முதல் பரிசு தட்டிச் செல்பவர்களுக்கு ஜல்லிக்கட்டு காளை சிறப்பு பரிசாக வழங்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் பரிசு பெறுபவர்களுக்கு வெள்ளாடு, பிரிட்ஜ்,தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.
சிறந்த வீரருக்கு தங்க காசு வழங்கப்படுகிறது. இதில் உள்ளூர் அணிகள் மட்டும் பங்கு பெறாமல் திருச்சி, புதுக்கோட்டை,மதுரை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வருகை தந்த அணியினர்களுக்கு திறமைக்கேற்ற பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த கபாடி போட்டியை அந்த ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கோயில் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.