புதுச்சேரி அடுத்த வில்லியனூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன், 75 வயதான அவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் ஆவார், சுப்பிரமணி ஊர் பயணங்கள் சென்றாலும் வெளியூர் சென்றாலும் தன்னுடன் எம்ஜிஆர் பாடலையும் கேட்டு கொண்டே செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

எம்ஜிஆரின் தீவிர ரசிகரான சுப்பிரமணியனுக்கு திருமணம் ஆகி மனைவி மகன்கள் இருந்தாலும் யாரையும் நம்பாமல் கடந்த 35 ஆண்டுகளாக மூன்று சக்கர ரிக்ஷா வண்டியில் கேழ்வரகு கூழ் வியாபாரம் செய்து வருகிறார்.
மழைக்காலமாக இருந்தாலும் வெயில் காலமாக இருந்தாலும் எதையும் பற்றி கவலைப்படாத சுப்பிரமணியன் தினமும் 25 கிலோமீட்டர் தூரம் ரிக்ஷாவில் சென்று எம்ஜிஆர் பாடலை ஒலிக்க விட்டு ரசித்துக்கொண்டே கூழ் வியாபாரம் செய்து சொந்தமாக சம்பாதித்து வருகிறார்.
இவரிடம் கூழ் வாங்குவதற்கு என்று ஒரு மிகப்பெரிய பட்டாளமே வில்லியனூரில் இருக்கிறது, அந்த அளவிற்கு சூப்பரான சுவையில் கூழ் விற்பனை செய்யும், சுப்பிரமணியன் கூழ் குடிப்பதற்கு மாங்கா ஊறுகாய், நார்த்தங்காய், எலுமிச்சை மற்றும் புதினா சட்னி, வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி, உள்ளிட்ட 7 வகையான ஊறுகாய் வகைகளையும் அவர் வழங்குகிறார்.
பத்து ரூபாய்க்கு மட்டுமே கூழ் விற்பனை செய்யும் சுப்பிரமணியன் இந்தக் கூழை குடித்தால் உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கிறது என்று இந்த கூழை பலர் அவரிடம் விரும்பி வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.
வில்லியனூர் மார்க்கெட் பகுதியில் எம்ஜிஆர் பாடல் ஒலிக்கிறது என்றால் சுப்பிரமணியன் கூழ் வியாபாரத்தை தொடங்கிவிட்டார் என்றே அர்த்தம் என்று சொல்லும் அளவிற்கு, வியாபாரம் களைகட்டும்.
எம்ஜிஆர் போன்று தொப்பி அவர் போன்று கருப்பு கண்ணாடி நெத்தியில் பட்டையுடன் சுப்பிரமணியன் மூன்று சக்கர ரிக்ஷா வண்டியில் வியாபாரம் செய்வதை பார்த்தது நமக்கும் அவரிடம் கூழ் வாங்கி குடிக்க வேண்டும் என்ற ஆசையை தூண்டும் வகையில் அவருடைய வியாபாரம் அமைந்திருக்கும்.
இது குறித்து வியாபாரி சுப்பிரமணியன் கூறும்போது…
கடந்த 35 ஆண்டுகளாக கூழ் வியாபாரம் செய்து வருவதாகவும் தினமும் கூழ் குடித்தால் உடல் ஆரோக்கியமாகவும், தெம்பாகவும் இருக்கிறது, உணவு என்ற பெயரில் கண்ட பொருட்களை சாப்பிட்டு உடம்பை கெடுத்துக் கொள்வதை விட கூழ் குடித்தால் பலமாக இருக்கலாம் என்று தெரிவிக்கிறார்.