வாஷிங்டன்: காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்ப்ரீத் சிங் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். மெக்சிகோ வழியாக சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த ஹர்ப்ரீத்தை எஃப்.பி.ஐ. கைது செய்தது. கலிபோர்னியாவில் வசித்து வந்த ஹாப்பி பாஸியா என்று அழைக்கப்படும் ஹர்ப்ரீத் சிங் கைது குறித்து எஃப்.பி.ஐ. அதிகாரப்பூர்வமாக இந்தியாவிற்கு அறிவித்துள்ளது. பஞ்சாபில் நடந்த பல பயங்கரவாத தாக்குதல் வழக்குகளுடன் தொடர்புடைய இவர், தேசிய புலனாய்வு அமைப்பால் (என்.ஐ.ஏ) தேடப்பட்டு வந்த குற்றவாளி ஆவார்.

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் ஆதரவுடன் செயல்படும் காலிஸ்தானின் பப்பர் கல்சா இன்டர்நேஷனல் (பி.கே.ஐ) மற்றும் பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாதி ஹர்விந்தர் சிங் சந்து (ரிண்டா) ஆகியோருடன் ஹர்ப்ரீத் சிங் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக பஞ்சாப் டி.ஜி.பி. கவுரவ் யாதவ் தெரிவித்தார். ஐ.எஸ்.ஐ.யின் ஆதரவுடன் நடைபெறும் பயங்கரவாதத்தை தடுப்பதில் ஹர்ப்ரீத்தின் கைது ஒரு முக்கியமான மைல்கல் என்றும் அவர் கூறினார்.
ஹர்ப்ரீத் சிங்கை கைது செய்து இந்திவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா எழுத்துப்பூர்வமாக அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்திருந்தது. ஹர்ப்ரீத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு தயாராகி வருகிறது. உலகளாவிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்களை பிடிப்பதில் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை ஹர்ப்ரீத்தின் கைது எடுத்துக்காட்டுகிறது என்று எஃப்.பி.ஐ. கூறி உள்ளது.