தேனி மாவட்டம் கம்பத்தில் பேக்கரியில், கேக்கினுள் உயிருடன் கரப்பான் பூச்சி இருந்ததை வாடிக்கையாளர் படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதனால், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கடை மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்தனர்.
கம்பம் புதுப்பட்டி பைபாஸ் ரோடு அருகே பிரபலமான பேக்கரியின் புதிய கிளை கடந்த மாதம் திறக்கப்பட்டது. நேற்று அந்த பேக்கரியில் கம்பத்தைச் சேர்ந்த அப்ரின் என்பவர் தனது நண்பர்களுடன் கேக் மற்றும் டீ சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். அப்பொழுது பேக்கரியில் கேக்கை வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது, அந்த கேக்கின் உள்ளே உயிருடன் குட்டி கரப்பான் பூச்சி நெளிந்து கொண்டிருந்தது.
இதைக் கண்டு திடுக்கிட்ட அப்ரின் கேக்கினுள் கரப்பான் பூச்சி இருந்ததை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ இப்பகுதியில் வைரலாக பரவியது. இதையடுத்து கம்பம் உணவு பாதுகாப்பு அலுவலர் மணிமாறன் தலைமையில் அதிகாரிகள் நேற்று இரவு குறிப்பிட்ட பேக்கரியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த கடை விவசாய நிலத்தை ஒட்டியுள்ளதால், பூச்சிகள் பேக்கரிக்குள் வந்து சென்றதை உறுதி செய்தனர். மேலும் பூச்சிகளை பிடிப்பதற்கான இயந்திரம் வைக்கப்படவில்லை, உணவு பாதுகாப்பு சான்று இல்லாமல் பேக்கரி கடை நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கடையில் பாதுகாப்பு இல்லாமல் வைத்திருந்த உணவு பண்டங்களை பறிமுதல் செய்து அகற்றினர். பின்னர் கடை உரிமையாளருக்கு ரூபாய் 2 ஆயிரம் அபராதம் விதித்தும், உணவு பாதுகாப்பு சான்று இல்லாமல் உணவு வகைகள் விற்பனை செய்யக் கூடாது என்றும் எச்சரிக்கை செய்து கடையை அடைத்தனர்.