• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

மருதமலை முருகன் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற கும்பாபிஷேகம்

Byவிஷா

Apr 4, 2025

மருதமலை முருகன் கோவிலில் அரோகரா கோஷம விண்ணதிர கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மருதமலை முருகன் கோவிலில் இன்று காலை 9.30 மணி அளவில் வெகுவிமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி, மருதமலை சுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில், யாக பூஜைகளுக்காக 73 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த யாக சாலையில் கடந்த இருநாட்களுக்கு முன்பே யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்று வந்தது.
இன்று (ஏப்ரல் 4) கும்பாபிஷேகத்தையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு ஆறுமுகனுக்கு 6-ம் கால யாகவேள்வி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து காலை 6 மணி முதல் 6.45 மணிக்குள் பரிவார மூர்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இன்று . காலை 8.30 மணிக்கு மருதாசல மூர்த்தி விமானம், ஆதிமூலவர் விமானம், ராஜகோபுரம், கொடிமரம், பரிவார விமானங்கள் அனைத்துக்கும் சமகால திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.
இறுதியாக காலை 9.05 மணிக்கு ஆதிமூலவர், விநாயகர், மருதாசலமூர்த்தி, பட்டீசுவரர், மரகதாம்பிகை, வீரபாகு, கரிவரதராஜ பெருமாள், சண்டிகேசுவரர் ஆகியோருக்கு சமகால திருக்குட நன்னீராட்டு விழா கோலாலகமாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை யொட்டி அதிகாலை முதலே மருதமலை முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கணக்கான பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்தனர். அவர்கள் படிக்கட்டுகள் வழியாகவும், கோவில் நிர்வாகம் சார்பில் இயக்கப்பட்ட பஸ்களிலும் பயணித்து மலைக்கோவிலுக்கு சென்றனர்.
கோவில் ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்ட போது பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என விண்ணதிர பக்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து பக்தர்கள் முருகப்பெருமனை சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காணும் வகையில் மலைப்படிக்கட்டுகள், அடிவார பகுதியில் ஆங்காங்கே பெரிய அளவிலான எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டு, அதில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

பக்தர்கள் வசதிக்காக மலைப்படிக்கட்டுகளில் பச்சைப்பந்தலும் அமைக்கப்பட்டிருந்தது. ஆங்காங்கே குடிநீர் வசதியும், கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர்மோர், குளிர்பானங்கள், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இன்று மாலை 4.30 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகமும், மாலை 5.30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் வீதி உலா வருகிறார். இதிலும் திரளான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மருதமலை முருகன் கோவில் பகுதியில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது.