தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை மூலம் பல்வேறு புதிய செயல் திட்டங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இவை நாட்டிற்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகின்றன. பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு தரப்பினரும் பங்களிப்பை செலுத்தும் வகையில் ”நம்ம School நம்ம ஊரு பள்ளி” என்ற திட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 19 அன்று அறிமுகம் செய்யப்பட்டது.
அதன் படி நம்ம School நம்ம ஊரு பள்ளி திட்டம் மூலம் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் திருவல்லிக்கேணி லேடி விலிங்டன் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், Virutusa நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 3.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகம், நவீன சமையற் கூடம் மற்றும் உணவு அருந்தும் அறை ஆகியவற்றை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தொடர்ந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு தட்டச்சர் பதவிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 5 பணியாளர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட செயலாளர் சிற்றரசு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மைச் செயலாளர் பி. சந்திரமோகன், பள்ளிக் கல்வி இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டார்கள்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
மதுரை வரும் பிரதமரிடம் தமிழகத்திற்கு நிதி பெறுவது தொடர்பாக நிதி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்து வலியுறுத்துவார் என்று கூறிய அவர் வக்ஃப் திருத்த சட்டம் தொடர்பாக தொடர்ந்து எங்களுடைய எதிர்ப்பை தெரிவிப்போம், சட்டசபையில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள்.
அதற்கு நியாயம் கேட்டு சட்டப்பேரவையில் கச்சத்தீவை மீட்பது குறித்த தீர்மானத்தை முதலமைச்சர் கொண்டுவந்துள்ளார் என்று கூறினார்.








