தமிழகத்தில் நாளை முதல் பெண்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்படும் எனவும், அவர்களுக்கு பதிவு கட்டணத்தில் 1சதவீதம் குறைக்கப்படும் எனவும் பத்திரப்பதிவுச் செயலாளர் அறிவித்துள்ளார்.
மகளிருக்கான சம சொத்துரிமையை உறுதி செய்யும் நோக்கில், 1989ஆம் ஆண்டு கலைஞர் மு.கருணாநிதி ஆட்சிக்காலத்தில் இயற்றிய சட்டத்தின் வழிவழியில், திராவிட மாடல் அரசு தொடர்ந்து மகளிரின் உயர்விற்கும் அதிகாரத்தின் உறுதிப்பாட்டிற்கும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சமூகத்திலும் குடும்பத்திலும் மகளிரின் சமபங்கை உறுதி செய்யும் வகையில், 01-04-2025 முதல், பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் ரூ.10 இலட்சம் மதிப்பிற்குட்பட்ட வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையாச் சொத்துகளுக்கான பதிவுக் கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும். இந்த அறிவிப்பினால் தற்போது நடைமுறையில் இருக்கும் பத்திரப் பதிவுகளில் 75சதவீதம் பேர் பயன்பெற முடியும். இதன் மூலம், மகளிரின் சுயசார்பு மற்றும் பொருளாதாரச் சுதந்திரம் மேலும் வலுப்பெறும் என்று அரசு நம்புகிறது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
அதன்படி, மகளிர் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு பதிவு கட்டணம் 1சதவீதம் குறைப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணையும் வெளியிட்டிருந்தது. இதன் மூலம் பத்திரப் பதிவுகளில் 75சதவீதம் பதிவுகள் பயன்பெறக்கூடும். அதன்படி, பெண்கள் பெயரில் பதிவாகும் பத்திரங்களுக்கு, பதிவு கட்டணத்தில் 1சதவீதம் குறைப்பு நாளை முதல் அதாவது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக பதிவுத்துறை செயலர் குமார்ஜெயந்த் அறிவித்துள்ளார்.
நாளை முதல் மகளிர் பெயரில் பத்திரப்பதிவு அமல்
