கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக பதவி வகிக்கும் முனைவர் கீதாலட்சுமியின் பதவிக்காலம் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதனைத் தொடர்ந்து, புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை, அப்பல்கலைக் கழகத்தின் பதிவாளர் துணைவேந்தராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என ஆளுநர் மாளிகை அறிவித்து உள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு ஆளுநரின் முதன்மைச் செயலாளர் கிரிலோஷ் குமார், பல்கலைக் கழக துணைவேந்தருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகச் சட்டம் 1971 பிரிவு 11 (4) இன் படி, பதிவாளர் துணைவேந்தராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் எனத் தெரிவித்து உள்ளார்.
மேலும், இது தொடர்பான தேவையான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு பல்கலைக் கழக நிர்வாகத்திற்கு ஆளுநர் மாளிகை அறிவுறுத்தி உள்ளது.
இந்த தகவல், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர், வேளாண்மை – உழவர் நலத் துறை, தலைமைச் செயலகத்திற்கும் தெரிவிக்கப்பட்டு இருப்பதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.