• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இருமொழிக் கொள்கை தொடர அமித்ஷாவிடம் வலியுறுத்தினோம்- இபிஎஸ் பேட்டி!

ByP.Kavitha Kumar

Mar 26, 2025

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையை தொடர வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வலியுறுத்தியதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திடீரென அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் அதிமுக நிர்வாகிகள் உடன் சென்றிருந்தனர். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இல்லத்தில் சுமார் 2 மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. அப்போது தமிழக அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தையும் நடைபெற்றுள்ளது

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சந்திப்பை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “2026-ல் தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமையும். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்து விடும்” என்று தெரிவித்தார். இதனால் பாஜக, அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று முடிந்துள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து குறித்து செய்தியாளர்கள் வினா எழுப்பினர்.

அதற்கு அவர், “தமிழ்நாடு அரசுக்கு விடுவிக்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தோம். நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பை தமிழ்நாட்டிற்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் நடத்த வேண்டும், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையை தொடர வேண்டும் என வலியுறுத்தினேன். கோதாவரி, காவேரி இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். மேகதாது அணை கட்ட மத்திய அரசு துணைநிற்கக் கூடாது என்றும் வலியுறுத்தினோம்.

டாஸ்மாக் ஊழல், போதைப் பொருள் விற்பனை என மிகவும் மோசமான நிலைக்கு தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது, அதனால் மத்திய அரசு தலையிட்டு இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். முழுக்க முழுக்க மக்கள் பிரச்சினைகளைப் பேசுவதற்காகத் தான் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்தோம்” என்று தெரிவித்தார்.