தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்ட நெல் குவிண்டால் 3500 ரூபாய் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பஞ்சாப் விவசாயிகளை துணை ராணுவத்தை வைத்து கைது செய்தனர். மத்திய அரசு மற்றும் பஞ்சாப் மாநில அரசுகளின் இந்த செயலை கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தமிழ்நாட்டில் இன்று ஆறு இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி மயிலாடுதுறை திருவாரூர் தஞ்சாவூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்ற ரயில் மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது. ரயில் மறியல் போராட்டம் செய்வதற்காக ஊர்வலமாக வந்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க விவசாயிகளை காவல்துறையினர் மயிலாடுதுறை ரயில்வே நிலைய வாசலில் தடுத்து நிறுத்தினர். அப்போது விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே பலத்த தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து ரயில்வே நிலைய வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். நெல்லுக்கு ஆதாரம் விலையை உயர்த்த வேண்டும் என்றும், கைது செய்யப்பட்ட பஞ்சாப் விவசாயிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகளை வலியுறுத்தி அப்போது அவர்கள் கண்டன கோஷமிட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.