• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு முழுவதும் நாளை கருப்புக் கொடி போராட்டம் – அண்ணாமலை அறிவிப்பு

ByP.Kavitha Kumar

Mar 21, 2025

தமிழ்நாடு அரசைக் கண்டித்து பாஜகவினர் அவரவர் வீட்டுக்கு முன்பு கருப்புக்கொடி போராட்டத்தில் நாளை (மார்ச் 22) ஈடுபடுவார்கள் என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. ஊழல் இல்லாத துறைகளே இல்லை எனும் அளவுக்குப் பல்லாயிரக்கணக்கான கோடி ஊழல் நடைபெற்றிருக்கிறது. சாமானிய மக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் கூட பாதுகாப்பு இல்லாத நிலையில் தமிழ்நாடு தாழ்ந்திருக்கிறது. படுகொலைகள் நடக்காத நாளே இல்லை பாலியல் குற்றங்கள் நிகழாத நகரமே இல்லை.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு எதிராக பொதுமக்களிடையே எழுந்துள்ள கோபத்தையும், எதிர்ப்பையும் மடைமாற்ற, பிற மாநிலங்களில் உள்ள இந்தியா கூட்டணிக் கட்சியினரையும் துணை சேர்த்து, நாளை ஒரு மெகா நாடகம் அரங்கேற்றத் திட்டமிட்டிருக்கிறார்கள். தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், ஒரு கற்பனையான பயத்தினை உருவாக்க முயற்சி செய்கிறார்கள்.

இதற்கு முன்பாக, நீட் எதிர்ப்பு என்ற பெயரில் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் கடிதம் எழுதினார். யாரும் மதிக்கவில்லை. இப்போது, அனைத்து மாநிலங்களுக்கும் ஆள் அனுப்பி நாளைய கூட்டத்தில் பங்கேற்க கேட்டுக்கொண்டுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, காவிரியில் தண்ணீர் வரத்து குறைக்கப்பட்டுள்ளது. டெல்டாவில் பயிர்கள் தண்ணீர் இன்றி வாடிப் போயின. ஆனால், கர்நாடக அரசிடம் காவிரி நீரைத் திறந்து விடச் சொல்லவில்லை. தமிழ்நாடு விவசாயிகளை விட அவரது இந்தி கூட்டணிதான் முக்கியமாக இருக்கிறது.

மேகதாது அணை, தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கட்ட முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி அரசு தெளிவுபடுத்திய பின்னரும் மேகதாது அணையைக் கட்ட தமிழ்நாட்டின் சம்மதம் தேவையில்லை, அணையைக் கட்டியே தீருவோம் என்று கூறிய கர்நாடக மாநிலத் துணை முதலமைச்சர் டி,கே சிவக்குமாருக்குத்தான் வாழிய பாடி வரவேற்கிறது தமிழ்நாடு அரசு. முல்லை பெரியாறு அணையில் ஆண்டாண்டு காலமாகத் தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்து வருகிறது கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு.

பேபி அணையைப் பழுது பார்க்கக் கூட, தமிழ்நாட்டு வல்லுநர்களை அனுமதிப்பதில்லை. தென்காசி மக்களுக்குப் பயன்படும் செண்பகவல்லி அணையிலும் தொடர்ந்து பிரச்னை மட்டுமே செய்து வருகிறது கேரள மாநிலம். இது தவிர, தமிழ்நாட்டில் கோவை, திருநெல்வேலி தென்காசி, கன்னியாகுமரி என எல்லை மாவட்டங்களில் இருந்து கனிம வளங்கள் அனைத்தும் கேரள மாநிலத்துக்குக் கடத்தப்படுகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் 5 முறை கேரள மாநிலத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், சாதித்தது என்ன?

அரிசி, பருப்பு, காய்கறிகள் என தமிழ்நாட்டில் இருந்து அனைத்தையும் பெற்றுவிட்டு, பதிலுக்கு கேரள மாநிலம் நமக்குத் தருவது, மருத்துவக் கழிவுகளும் இறைச்சிக் கழிவுகளும் தான். கேரள அரசு மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவக் கழிவுகளைக் கூட, நமது எல்லை மாவட்டங்களில் வந்து கொட்டிக் கொண்டிருக்கிறது கேரள அரசு. இரண்டு நாட்களுக்கு முன்பாக, அங்குள்ள நாய்களைக் கொண்டு வந்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் விட்டுச் சென்றார்கள்.

இவை அனைத்தும் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுக்குத் தெரியாமலா நடக்கிறது? இப்படி, தமிழ்நாட்டை ஒரு குப்பைக் கிடங்காகப் பார்க்கும் கேரள முதலமைச்சருக்குத் தான் சிவப்புக் கம்பளம் விரிக்கிறார்கள். தனது இந்தியா கூட்டணிக் கட்சியினருக்காக, தமிழ்நாட்டு மக்கள் நலனுக்கு விரோதமாகச் செயல்படும் மு.க.ஸ்டாலினைக் கண்டித்து, நாளை தமிழ்நாடு பாஜக சார்பில், கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும்.

தமிழ்நாடு பாஜக உறுப்பினர்கள் அனைவரும், நாளை (22.03.2025) காலை 10 மணிக்கு, அவரவர் வீட்டு முன்பாக நின்று, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் கர்நாடக, கேரள மாநிலத் தலைவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து, கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.