தமிழ்நாட்டில் நடப்பாண்டில் 2,545 ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறினார்.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 14-ம் தேதி நிதிநிலை அறிக்கையுடன் கூட்டம் தொடங்கியது. அதற்கு அடுத்தநாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கைகள் குறித்து தினமும் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீது இன்றும் விவாதம் நடைபெற்றது. அப்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடை புகார் பெட்டிகள் மூலம் எத்தனை புகார்கள் வந்துள்ளன என்று கேள்வி எழுப்பிய சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ்குமார், புகார் பெட்டிகளை மக்களுக்குத் தெரியுமாறு வைக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தார். இதற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பதிலளித்து பேசுகையில், திமுக ஆட்சியில் ரேஷன் கடைகளில் புகார் பதிவேடுகள் மூலம் 97,535, புகார் பெட்டிகள் மூலம் 875 புகார்கள் வந்துள்ளன. புகார் பதிவேடு பெட்டிகளை மக்களுக்கு தெரியும் வகையில் வைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம். மேலும், ரேஷன் கடைகளில் கைரேகை வைப்பத்தில் சிக்கல் இருந்தால், புகாரை உடனுக்குடன் சரிசெய்கிறோம். மேலும் ரேஷன் கடைகளில் பிராட் பேண்ட் சேவைகளை தடையின்றி விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவு கூறினார்.
சட்டப்பேரவை உறுப்பினர் அசோக்குமார் எழுப்பிய கேள்விக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 34,902 ரேஷன் கடைகளில் 6,218 கடைகள் வாடகை கட்டிடங்களில் செயல்படுகின்றன. நடப்பாண்டில் 2,545 கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று பதில் அளித்தார்.
திருப்பூர் காளிபாளையத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படுமா என சட்டப்பேரவை உறுப்பினர் விஜயகுமார் கேள்வி எழுப்பினார். களியாபாளையத்தில் முற்கட்டமாக கால்நடை கிளை நிலையம் அமைக்க பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன் வளத்துறை, மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பதிலளித்தார்.