கேரளாவுக்கு கடத்த பூட்டிய குடோனில் பதுக்கி வைத்திருந்த 26 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். குடோனை சீல் வைத்து அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசு பொது விநியோகத்திட்டத்தில் நியாயவிலைக் கடைகளின் மூலம் பொது மக்களுக்கு மாதந்தோறும் குடும்ப உறுப்பினர்களுக்கு எண்ணிக்கைக்கு ஏற்றவாறு விலையில்லா அரிசி வழங்குகிறது. இதில் கூடலூர், கம்பம், பாளையம், கோம்பை, போடி, சின்னமனூர், தேனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சில ரேசன் அரிசி வியாபாரிகள், அரிசியை ரேசன் கடைகளிலிருந்து வாங்கி கம்பம்மெட்டு, குமுளி, போடி மெட்டு எல்லைப்பகுதி வழியாக வாகனங்களில் கேரளா கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

கம்பம், சின்னமனூர் பகுதிகளில் ரேஷன் அரிசி மற்றும் கோதுமையை கால்நடை தீவனமாக அரைத்து கேரளாவுக்கு அனுப்பி வைத்து விற்பனை செய்கின்றனர். இதற்காகவே கம்பம், பாளையம், சின்னமனூர் பகுதிகளில் தனியாக மாவு வரைக்கும் மில்கள் உள்ளன. ரேஷன் அரிசியை மாவாக அரைத்தால் எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்பதால், கம்பம் பகுதியில் சிலர் இதையே தொழிலாக வைத்துள்ளனர். ஆனால் தேனி மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தலை முழமையாக ஒழிக்க தேனி கலெக்டர் ரஞ்சித் சிங் உத்தரவிட்டுள்ளார் .
இந்நிலையில் தேனி அல்லிநகரம் காவல் நிலையம் அருகே உள்ள குடவுன் பல மாதங்களாக பூட்டியே கிடந்தது. இதில் ரேசன் அரிசி பதுங்கி வைத்து இருப்பதாக ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் மாவட்ட வழங்கல் அலுவலர் மாரி்ச்செல்வி, உணவுப் பொருள் தடுப்புப்பிரிவு உத்தமபாளையம் காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையிலான குழுவினர் நேற்று இரவு பூட்டி இருந்த குடவுனின் பூட்டை உடைத்து சோதனை செய்தனர்.

அப்போது அங்கு 400மூடையில் 26டன் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இவற்றை பறிமுதல் செய்த போலீஸார் தேனி நுகர்பொருள் வாணிபக்கழக குடவுனில் ஒப்படைத்தனர். தொடர்ந்து ரேஷன் அரிசி பதுக்கிய குடோனை சீல் வைத்து அதிகாரிகள், அரிசி கடத்தியவர் யார் என்றும், சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர்கள் யார் என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஒரே இடத்தில் 26 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.