இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் காஸாவைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபரில் இஸ்ரேலுக்குள் ஹமாஸ் அமைப்பினர் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,200 பேரைக் கொன்று 251 பேரை கடத்தினர். இதன் காரணமாக இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடங்கியது. இப்போரில் இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதலால் இதுவரை 48,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த போரால் 2.3 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக காஸா சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் தலையீட்டால் இஸ்ரேல் – காஸா இடையே நடப்பாண்டு ஜனவரி 19-ம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் இரு நாடுகளில் உள்ள பணயக்கைதிகளை விடுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு மூன்று கட்டங்களாக திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவம் காஸா, டெய்ர் அல்-பலா, கான் யூனிஸ் மற்றும் ரஃபா உள்ளிட்ட பல இடங்களில் வான்வழித் தாக்குதல்கள் தாக்குதல் நடத்தியுள்ளது. இது போர் நிறுத்தத்திற்கு பிறகு நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாகும். இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிணைக் கைதிகளை விடுவிப்பதில் ஹமாஸ் தொடர்ச்சியாக சுணக்கம் காட்டி வருகிறது. அதேபோல் இவ்விவகாரத்தில் அமெரிக்க அதிபரின் தூதர், மற்றும்பிற மத்தியஸ்தர்களின் ஆலோசனைகளையும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதையடுத்து காஸா மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளோம். இந்த நிமிடம் முடல் ஹமாஸுக்கு எதிரான ராணுவ பலம் படிப்படியாக அதிகரிக்கப்படும்.” என்று கூறப்பட்டுள்ளது.
காஸாவில் இன்னும் மீதமுள்ள 59 பணயக்கைதிகளின் நிலை குறித்து இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே பல வாரங்களாக நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை நிலையில் வான்வழித் தாக்குதல் நடந்துள்ளது.