கள்ளச்சாராய வியாபாரிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட இளைஞர்கள் குடும்பத்திற்கு நீதி வழங்க கோரி நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், கொலை செய்யப்பட்ட இளைஞரின் தாயார், கதறி அழுது கொண்டிருந்தபடியே மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது.

மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தில் கடந்த மாதம் 14ஆம் தேதி சட்டவிரோத கள்ளச்சாராயம் விற்பனையை தட்டி கேட்ட பொறியியல் கல்லூரி மாணவர் கூட இரண்டு பேர் சாராய வியாபாரிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இரண்டு பேரின் குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியும் அரசு வேலை வழங்க கோரியம் தமிழ்நாடு முழுவதும் பரவிக் கிடக்கும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க வலியுறுத்தியும் மது போதைப்பொருள் ஒழிப்பு இயக்கம் மற்றும் புரட்சித் தமிழர் மக்கள் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்றது.
போதைப்பொருள் ஒழிப்பு இயக்க தலைவர் டாக்டர் NGM.ஆனந்தராஜ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு இயக்கம் மாநில தலைமை உரிமைப்பாளர் ராமதாசன் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தமிழக அரசை கண்டித்தும் கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பினர் போராட்டத்திற்கு ஆதரவாக உயிரிழந்த இளைஞர்கள் ஹரிஷ் மற்றும் ஹரிசக்தி ஆகியோர் தாயார் மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர்.

உயிரிழந்தவர்களின் தாயார்கள் கண்ணீர் விட்டு அழுத காட்சி சோகத்தை ஏற்படுத்திய நிலையில், ஹரிசக்தியின் தாயார் கௌரி என்பவர் போராட்டத்தில் கதறி அழுது கொண்டிருந்த பொழுது மயங்கி விழுந்தார். அவரை அருகில் உள்ளவர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிய வைத்தனர். முன்னதாக போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.