தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பு 151 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது என்று தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.
தமிழ்நாடு அரசின் 2025-26-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்து உரையாற்றினார். இந்த பட்ஜெட்டில் கல்வி, மருத்துவம், போக்குவரத்து, மகளிர் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த முக்கிய அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 2025-26-ம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 15) தாக்கல் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பு 151 லட்சம் ஹெக்டேராக உயர்ந்துள்ளது. கேழ்வரகு உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தையும், கரும்பு உற்பத்தியில் 2-வது இடத்தையும், நிலக்கடை உற்பத்தியில் 3-வது இடத்தையும் வகிக்கிறது. 30 லட்சம் உழவர்களுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. பயிர் கடன் ரூ. 3.58 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2021-24-ம் ஆண்டு வ, 147 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் நீர் பாசனப் பகுதிகளில் கால்வாய்களை தூர்வாரியதால், 89.90 லட்சமாக இருந்த பாசன பகுதி 96 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 215 ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது. வேளாண் பட்டதாரிகளை வேளாண் தொழில் முனைவோர்களாக்கும் திட்டத்தில் 431 இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக மாறியுள்ளனர். அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளன என்று பேசினார்.
மேலும் பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டு பேசி வருகிறார் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் மரியாதை செலுத்தினார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பச்சைத்துண்டு அணிந்து கலந்து கொண்டுள்ளனர்.