குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஆறாவது மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டில் அட்லாண்டிஸ் என்ற 12 மாடி அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் 6வது மாடியில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக அதிக அளவு கரும்புகை சூழ்ந்ததால், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் குடியிருப்பில் இருந்தவர்கள் அங்கிருந்து அவசரமாக வெளியேறினர்.
அடுக்குமாடி குடியிருப்பில் தீப்பற்றி எரிவதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். குடியிருப்பு பகுதியில் சிக்கியிருந்த 50 பேரை பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் மூன்று பேர் பரிதாப உயிரிழந்தனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து ராஜ்கோட் நகர காவல்துறை துணை ஆணையர் ஜெகதீஷ் பங்கார்வா கூறுகையில், அடுக்குமாடி குடியிருப்பில் பற்றிய தீ அணைக்கப்பட்டு அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்று கூறினார்.