மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் மின் வயர்கள் தாழ்வாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தெற்கு தெரு விக்கிரமங்கலம் செல்லும் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் வீடுகளின் அருகிலேயே மிகவும் தாழ்வாக மின்வையர்கள் செல்கிறது. இது குறித்து, மின்வாரிய அலுவலர்கள் ஊராட்சி நிர்வாகம் ஆகியோரிடம் பலமுறை எடுத்துச் சொல்லியும் மின்வயர்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும், அந்தப் பகுதியில் இருசக்கர மற்றும் கனரக வாகனங்களில் செல்லும்போது பாதுகாப்பாற்ற நிலை ஏற்படுகிறது குழந்தைகள் பெரியவர்கள் கவனக்
குறைவாக இருக்கும் பட்சத்தில் விபத்து ஏற்பட்டு உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகையால்,மாதாந்திர பராமரிப்பு பணியின் போது இந்த பகுதியில் தாழ்வாக செல்லும் மின் வயர்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.