தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் அருள்மிகு ஞானாம்பிகை உடனுறை திருக்காளாத்தீஸ்வரர் திருக்கோவிலில் மாசி திருவிழாவினை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் மிகவும் பழமையான தமிழகத்தின் தென் காளகஸ்தி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஞானாம்பிகை உடனுறை திருக்காளாத்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் மாசி மகாதேர் திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று ஞானாம்பிகை உடனுறை திருக்காளாத்தீஸ்வரர் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

நாளைய தினம் திருக்கோவிலில் மாசி மகா தேரோட்டம் நடைபெற உள்ளது இதனை முன்னிட்டு கடந்த மார்ச் ஒன்றாம் தேதி கோவிலில் கொடியேற்றம் நடைபெற்று, நாள்தோறும் பல்வேறு மண்டகடிகள் நடைபெற்று வந்தது. இதனை அடுத்து இன்று திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி கோவில்களாகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.முன்னதாக மேடை மீது அமைக்கப்பட்டிருந்த யாக குண்டத்தில் பலவித மூலிகை பொருட்கள் கொண்டு யாகம் வளர்க்கப்பட்டு பின் சுவாமி திருக்காளாத்தீஸ்வரர் உடன் பிரியாவிடை, ஞானம்பிக்கைக்கு புது பட்டு சேலை அணிவித்து திருக்கல்யாண கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தனர். தொடர்ந்து சுவாமி அம்பாளுக்கு காப்புகள் கட்டப்பட்டு பின் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது .

திருக்காளாத்தீஸ்வரருக்கு வெண்பட்டு உடுத்தி பிரியாவிடை மற்றும் ஞானாம்பிகை அம்பாளுக்கு வண்ண பட்டுத்தி திருக்கல்யாண கோலத்தில் காட்சித் தந்த சுவாமி அம்பாளுக்கு மூன்று முறை மாலை மாற்றும் வைபவம் நடைபெற்று பின் மகா தீபாராதனையுடன் ஷோடச உபச்சாரம் நடத்தி பஞ்ச கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. திருக்கல்யாணத்தை தல அர்ச்சகர் சாஸ்தா மாணிக்கவாசகம் நடத்தி வைத்தார். இதில் உத்தமபாளையம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டு களித்து தரிசித்துச் சென்றனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
