பாஜக ஆளாத பல மாநிலங்கள் தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளன ஆனால், திமுகவினர் நேர்மையற்றவர்கள் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு மக்களவையில் திமுக எம்.பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்டம் இன்று (மார்ச் 10) தொடங்கியது. கேள்வி நேரத்தின் போது தென் சென்னை திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் பேசுகையில், “பிரதமர் ஸ்ரீ திட்டத்தில் தமிழகத்துக்காக ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்கள் இந்த நிதியை பெற்றுள்ளன. நாங்கள் தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றாததால் எங்களுக்கு இந்த நிதி மறுக்கப்படுகிறது. மாநிலங்களை பழிவாங்க பள்ளி மாணவர்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவது சரியா? மத்திய அரசின் இந்தச் செயல், பள்ளி மாணவர்களின் கல்வியைப் பாதிக்கிறது. எனவே, கட்டாயமற்ற மத்திய அரசின் சட்டத்தை பின்பற்றாததால், நிதி வழங்க மறுப்பது கூடாது. எந்த ஒரு மாநிலமும் இதுபோல் நிதி இழப்பை சந்திக்காத நிலையை மத்திய அரசு உருவாக்குமா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்து பேசுகையில்,, “ மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு முதலில் ஏற்றுக் கொண்டது. பிறகு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. இப்போது என்னிடம் கேள்வி கேட்ட தமிழச்சி தங்கபாண்டியன், மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் சில தமிழக எம்.பிக்கள் என்னை நேரில் வந்து சந்தித்து பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தனர். பின்னர் யு டர்ன் அடித்துவிட்டார்கள். தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பிரச்சினை செய்கிறார்கள்.
மாநில அரசு மீண்டும் எங்களோடு பேசலாம். நாங்கள் பேசுவதற்கு தயாராக இருக்கிறோம். நாட்டில் பாஜக ஆளாத பல மாநிலங்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் ஆளும் கர்நாடகா இதற்கு ஒரு உதாரணம். அவர்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டு பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் நிதி பெறுகிறார்கள். இதேபோல், இமாச்சலப் பிரதேச மாநிலமும் பிஎம் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆனால், திமுகவினர் நேர்மையற்றவர்கள். அவர்கள் தமிழ்நாட்டு மாணவர்களிடம் உறுதியாக இல்லை. அவர்கள் தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்குகிறார்கள். மொழி பிரச்சியை தூண்டுவது மட்டுமே அவர்களின் வேலை. இந்த விவகாரத்தில் அரசியல் செய்கிறார்கள். இவர்கள் ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள், நாகரிகமற்றவர்கள்” என்று தர்மேந்திர பிரதான் பேசிக்கொண்டிருக்கும் போது அனைத்து திமுக மக்களவை உறுப்பினர்களும் எழுந்து மத்திய அரசுக்கு எதிராகவும், நீதி வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பியதால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தமிழக எம்.பிக்களின் தொடர் முழக்கத்தால் மக்களவையை மதியம் 12 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.