• Fri. Oct 2nd, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த அமைச்சர் பி.மூர்த்தி…

ByKalamegam Viswanathan

Mar 6, 2025

மதுரை மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக, ரூ.6.20 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ள, அரிட்டாப்பட்டி கிராமம் மற்றும் மேற்கு ஊராட்சி ஒன்றியம் கோயில் பாப்பாக்குடி ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, ரூ.6.20 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர், மதுரை மாவட்டம், அரிட்டப்பாட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல் குரல் கொடுத்ததோடு சுரங்கம் அமைக்க வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டு வந்து அனைத்து கட்சிகளின் ஆதரவோடு ஒரு மனதாக நிறைவேற்றினார்கள். அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராம பொதுமக்களின் உணர்வை பிரதிபலிக்கும் வகையில் உறுதியான நடவடிக்கையின் மூலம் ஒன்றிய அரசை வலியுறுத்தி இப்பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமையாமல் தடுத்துள்ளார்கள். மேலும், அரிட்டாப்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.
அதன்படி, அரிட்டாப்பட்டியில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கதிர் அடிக்கும் களம் விரிவாக்கம், குடிநீர் திட்டப்பணி மேம்பாடு, கலையரங்கம் மேம்பாடு, மயானம் மேம்பாடு என 17 திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதேபோல, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோயில் பாப்பாக்குடி பகுதியில் ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் 40 புதிய பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் 1 மாத காலத்திற்குள் முழுமையாக நிறைவேற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் வசதி, சாலை வசதி, தெருவிளக்கு போன்ற பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுமக்களின் தேவையை அறிந்து உடனுக்குடன் நிறைவேற்றிகின்ற அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக எப்போது வேண்டுமானாலும் அரசு நிர்வாகத்தை அணுகலாம் என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, கூடுதல் ஆட்சியர் ( வளர்ச்சி) மோனிகா ராணா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் இந்துமதி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.