உசிலம்பட்டியில் சமூக நலத்துறை சார்பில் 310 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.


இதன் ஒரு பகுதியாக இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் சேடபட்டி, செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள சுமார் 310 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்நிகழ்வில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களை ஆசிர்வதித்து நல்ல முறையில் குழந்தைகளை பெற்றெடுக்க வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் சமூக நலத்துறை அலுவலர்கள் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சந்தனம் குங்குமம் இட்டு, வளையல்களை அணிவித்தனர். தொடர்ந்து அனைத்து தாய்மார்களுக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.





