தென்தமிழகத்தில் இருந்து வரும் பேருந்துகள் நாளை (மார்ச் 4) முதல் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு அனைத்து பேருந்துகளும் மாற்றி இயக்கப்பட்ட நிலையில், சில போக்குவரத்துக் கழக பேருந்துகள் தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்தது. இதனால் தென் தமிழக மக்கள் பயனடைந்து வந்தார்கள். இந்த நிலையில், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, பேருந்துகளை கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்க வேண்டும் என போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனையொட்டி வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தாம்பரம் போக்குவரத்து காவல்துறை வழங்கியுள்ள பரிந்துரைப்படி தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் அனைத்தும் மார்ச் 4-ம் தேதி முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.
இதையொட்டி, கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பயணிகளின் நலன் கருதி மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தற்போது 80 வழித்தடங்களில் 589 பேருந்துகள், 3795 நடைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இத்துடன் கூடுதலாக 104 பேருந்துகள் 815 நடைகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.