தமிழக முதல்வர் 159 சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர அந்தஸ்தினை வழங்கியுள்ளார். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் ஜோ அருண் பேட்டி அளித்தார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் திண்டுக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் கலந்துரையாடல் கூட்டம் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் ஜோ அருண் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திண்டுக்கல் மாவட்ட சிறுபான்மையினர் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து அரசின் நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை மற்றும் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. மேலும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், சமணர்கள், பௌத்தர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் பிரிவுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
சிறுபான்மையினர் மாநிலத் தலைவர் ஜோ அருண் அவர்களது கோரிக்கை மனுக்களின் மீது அந்தந்த துறை அதிகாரிகளிடம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு கண்டார். இதில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன், திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப், நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், ஊரக வளர்ச்சி திட்ட முகமை அலுவலர் திலகவதி உடன் இருந்தனர்.

அதை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் ஜோ அருண் பேசியது :
தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படியும், சிறுபான்மை துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்படியும், சிறுபான்மையினர் துறை அரசு அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து சிறுபான்மையினர் மக்களுக்கு பாதுகாப்பு, அவர்களுக்கான உரிமைகள் மற்றும் அவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் எந்த அளவிற்கு அவர்களிடம் சென்று சேர்ந்துள்ளது, அவர்கள் பாதுகாப்பாக வாழ்கிறார்களா ? அரசியல் சாசன சட்டத்தின் படிதமிழ்நாட்டின் உடைய சிறுபான்மையினர் சட்டத்தின் படி மக்கள் பாதுகாப்பாக வாழ்கிறார்களா ?, மத நல்லிணக்கத்தோடு வாழ்கிறார்களா? என்ற ஆய்வின்படி 38 மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இதுவரை 10 மாவட்டங்களில் ஆய்வு முடித்து விட்டோம். நேற்று 11வது மாவட்டமாக தேனி மாவட்டமும், இன்று 12வது மாவட்டமாக திண்டுக்கல்லில் சிறுபான்மையின மக்களிடம் அவர்களின் குறைகளை கேட்டோம். மக்கள் பெருவாரியான குறைகளை எங்களிடம் கூறியுள்ளனர்.
இதுவரை மக்கள் கூறிய குறைகளை தீர்த்து வைத்துள்ளோம். 10 மாவட்டங்களில் 489 கோரிக்கை மனுக்களை பெற்றுள்ளோம். இந்த 489 கோரிக்கைகளில் 302 கோரிக்கைகளை உடனடியாக மாவட்ட ஆட்சியர் மூலமாகவும், துறை அதிகாரிகள் உதவியோடும், சிறுபான்மை இன மக்கள் துணையுடன், ஆணைய உறுப்பினர்கள் துணையுடனும் தீர்த்து வைத்துள்ளோம். இதுவரை முக்கிய பிரச்சினையாக இருந்த சிறுபான்மையின கல்வி நிறுவனங்களுக்கு உரிய அந்தஸ்து கிடைக்காமல் ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை அணுக வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால் தற்பொழுது தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் சிறுபான்மையின மக்களுக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அவர்கள் முன்னேற வேண்டும் என்று சிறுபான்மையினர் மக்களின் நலனில் அக்கறை கொண்டு தமிழக முதல்வர் 159 சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர அந்தஸ்தினை வழங்கியுள்ளார்கள். அண்மையில் டெட் தேர்வு அவசியம் என்று இருப்பதனை மேல்முறையீடு செய்யாமல் அதனை சுப்ரீம் கோர்ட்டில் இருந்து வாபஸ் பெற்று ஆயிரக்கணக்கான சிறுபான்மையின ஆசிரியர்களும் மற்ற ஆசிரியர்களும் பயன் பெரும் வகையில் தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.