நேட்டோ உறுப்பினர் பதவி கொடுத்தால் பதவி விலக தயார் என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கடந்த, 2022 பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இந்த போர் மூன்று ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், போர் நீடித்து வருகிறது. இந்த போரில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இரு நாடுகளுக்குகிடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் முயற்சித்து வருகின்றன.
அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. இருப்பினும், போர் குறித்த பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதற்கிடையில், ‘உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சர்வதிகாரி. இவர் போர் நிறுத்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாக விட மாட்டார்’, என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் போர் தொடங்கி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், கியேவில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களிடம் கூறுகையில், “உக்ரைனில் அமைதி நிலவ, நான் பதவியை விட்டு விலக வேண்டும் என நீங்கள் விரும்பினால், நான் பதவி விலகுகிறேன். உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவி கொடுத்தால் நான் அதிபர் பதவியை விட்டு விலகத் தயாராகவே இருக்கிறேன். அந்த நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டால் உடனடியாக நான் இதை செய்கிறேன்.
மேலும்,உக்ரைனின் நிலைப்பாட்டை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புரிந்து கொள்ள வேண்டும். ரஷ்யாவின் தாக்குதலால் நாங்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, ட்ரம்ப் ரஷ்யாவிடம் இருந்து எங்களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே மத்தியஸ்தனம் செய்யும் நபராக மட்டும் ட்ரம்ப் இருக்கக்கூடாது” என்றார்.













; ?>)
; ?>)
; ?>)