• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

குறுந்தொகைப் பாடல் 29

Byவிஷா

Feb 19, 2025

நல்லுரை யிகந்து புல்லுரை தாஅய்ப்
பெயல்நீர்க் கேற்ற பசுங்கலம் போல
உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி
அரிதவா உற்றனை நெஞ்சே நன்றும்
பெரிதால் அம்மநின் பூசல் உயர்கோட்டு
மகவுடை மந்தி போல
அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே.

பாடியவர்: ஒளவையார்.
திணை: குறிஞ்சி

பாடலின் பின்னணி:
தலைவியைச் சந்திப்பதற்காக இரவு நேரத்தில் தலைவன் வந்திருக்கிறான். தலைவிக்குப் பதிலாக அங்கே தோழி வருகிறாள். “தலைவி வரவில்லையா?” என்று தலைவன் கேட்கிறான். “இனி, உன்னைச் சந்திக்கத் தலைவி வரமாட்டாள். நீ அவளை விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று அவள் விரும்புகிறாள்” என்று தோழி கூறுகிறாள். தலைவியைக் காண முடியவில்லையே என்ற வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தலைவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தன் கருத்திற்கு உடன்பட்டுத் தலைவி வரவில்லையே. அவள் வந்திருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்குமே! இப்பொழுது நான் என் செய்வேன்” என்று தலைவன் தன் நெஞ்சிடம் கூறுகிறான்.
பாடலின் பொருள்:
நெஞ்சே, நல்ல செய்திகள் கூறப்படவில்லை. பயனற்ற சொற்களே மிகுதியாகக் கூறப்படுகின்றன. பெய்யும் மழையினால் நீர் நிரம்பி வழியும், பசு மண்ணாலாகிய பாத்திரத்தைப் போல, உள்ளத்தினால் பொறுக்க முடியாத, ஆசை வெள்ளத்தில் நீந்திப் பெறுதற்கு அரியதை நீ பெற விரும்புகிறாய். உன்னுடைய போராட்டம் மிகவும் பெரியது. உயர்ந்த மரக் கொம்பில் உள்ள, குட்டியை உடைய பெண் குரங்கு தன் குட்டியால் தழுவப் பெற்று அமைதி அடைவது போல, மனம் பொருந்த, உன் கருத்தைத் தழுவிக் கொண்டு, உன் வருத்தத்தைக் கேட்டு உன் குறையை நிறைவேற்றுவாரை, நீ பெற்றால் அது மிகவும் பெருமைக்குரியது.