கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேடுதல் குழு அமைத்து தமிழ்நாடு அரசு, அரசிதழில் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் செல்வக்குமார், கடந்த 2021 ஏப்ரல் மாதம் நியமனம் செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு நிறைவு பெற்றது. இதன்பிறகு, ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த சூழலில், அவரின் நீட்டிக்கப்பட்ட பணிக்காலம் வருகிற ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை தேர்வுசெய்ய தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலர் சத்யபிரத சாஹூ அரசிதழில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய தேடுதல் குழுவை அரசு அமைத்துள்ளது.
இக்குழுவில் ஆளுநரின் பிரதிநிதியாக தேசிய கல்வித் திட்டம் மற்றும் மேலாண்மைக்கல்வி நிறுவன துணைவேந்தரும், யுஜிசியின் உறுப்பினருமான பேராசிரியர் சசிகலா வாஞ்சாரியும், அரசின் பிரதிநியாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஓய்வுபெற்ற இயக்குநருமான (கிளினிக்கல்) டாக்டர் பி.தனபாலனும், தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக கல்விக்குழுவின் பிரதிநிதியாக கால்நடை பொருட்கள் தொழில்நுட்பத்துறையின் முன்னாள் தலைவரான டாக்டர் ராபின்சன் ஜெ.ஜெ.ஆபிரகாமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆளுநரின் பிரதிநிதியான பேராசிரியர் சசிகலா வாஞ்சாரி குழுவின் அமைப்பாளராக செயல்படுவார். புதிய துணைவேந்தரை தேர்வுசெய்யும் வகையில் தேடுதல் குழு 3 பேர்களை வேந்தருக்கு பரிந்துரை செய்யும்” என்று கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசால் அமைக்கப்படும் துணைவேந்தர் தேடுதல் குழுவைப் பொருத்தவரை ஆளுநரின் பிரதிநிதி, அரசின் பிரதிநிதி, பல்கலைக்கழகத்தின் பிரதிநிதி என 3 பேர் இடம்பெறுவர். ஆனால், பல்கலையின் வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவி இக்குழுவில் யுஜிசியின் பிரதிநிதியும் இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.
தமிழ்நாடு அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கால்நடை பல்கலையின் துணைவேந்தர் தேடல் குழுவின் அமைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஆளுநரின் பிரதிநிதியான சசிகலா வாஞ்சாரி, தேசிய கல்வி திட்டம் மற்றும் மேலாண்மைக்கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் மட்டுமின்றி யுஜிசியின் உறுப்பினராகவும் உள்ளார். ஆனால், சசிகலா வாஞ்சாரி தேடுதல் குழுவில் யுஜிசியின் பிரதிநிதியாக நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




