கடந்த வெள்ளிக்கிழமையன்று அலாஸ்கா கடல் பனியில் பயணிகள் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 10 பயணிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவின் உனலக்லீட்டில் இருந்து, உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 2.37 மணியளவில் செஸ்னா 208பி கிரான்ட் காராவன் எனும் சிறிய ரக விமானம் 10 பேருடன் புறப்பட்டு சென்றது. புறப்பட்ட 39 நிமிடங்களிலேயே ரேடாரில் இருந்து தொடர்பை இழந்து மாயமானது. இதைத் தொடர்ந்து, மாயமான விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் அலஸ்காவின் பொதுப் பாதுகாப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளை மலை பகுதியில் விமானம் ஏதேனும் விபத்துக்குள்ளானதா? என்ற சந்தேகத்தின் பேரில் உள்ளூர் மக்களின் உதவியுடன் கடல் பகுதிகளில் விமானத்தை தேடி வந்தனர்.
அலாஸ்காவில் 10 பேருடன் காணாமல் போன விமானம் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இந்த விமானத்தில் பயணித்த 10 பேரும் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது. விமானத்திற்குள் மூன்று நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய ஏழு பேரும் விமானத்திற்குள் சடலமாக இருப்பதாகவே நம்பப்படுகிறது, ஆனால் விமானத்தின் மோசமான நிலை காரணமாக தற்போது அவர்களை அணுக முடியவில்லை என்றே அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
நோமிலிருந்து தென்கிழக்கே சுமார் 34 மைல்கள் தொலைவில் விமானம் விபத்தில் சிக்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானம் கண்டுபிடிக்கப்பட்டு, மூன்று சடலங்களை மீட்டுள்ளதாக உறுதி செய்த யுஎஸ்சிஜி, இந்த துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல்களை பதிவு செய்வதாக குறிப்பிட்டுள்ளது. சிஎன்என் செய்தி ஊடகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், பெரிங் ஏர் நிறுவனத்தால் இயக்கப்படும் செஸ்னா விமானம், ஒன்பது பயணிகள் மற்றும் ஒரு விமானியுடன், வியாழக்கிழமை உனலக்லீட்டில் இருந்து நோம் நோக்கி பயணித்த நிலையில் காணாமல் போனது.
கடல் பனியில் விழுந்து நொறுங்கிய விமானம்
