• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தவெகவில் பதவிக்கு லட்சக்கணக்கில் பணம் வசூல்… புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை!

ByP.Kavitha Kumar

Jan 23, 2025

பதவிக்கு பணம் வாங்கினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எச்சரித்துள்ளார்.

நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் (தவெக) என்ற கட்சியை தொடங்கினார். அப்போது எந்த தேர்தல் வந்தாலும் போட்டியிட போவதில்லை என்றும், 2026 சட்டசபை தேர்தலை நோக்கி பயணிப்பது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இக்கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி பொறுப்புகளுக்கு பணம் வாங்குவதாகவும், விழுப்புரம் மாவட்டத்தில் நகர செயலாளர் பதவிக்கு ரூ.15 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், பணம் இருந்தால்தான் பதவி என்ற தகவல் பரவியது.

மேலும் இதற்காக வாட்ஸ் அப் குழு ஒன்று அமைக்கப்பட்டதாகவும், அதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்தும் இடம் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக ஊடகங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் பதவிக்கு பணம் வாங்கினாலோ அல்லது பணம் கொடுத்தாலோ, அது யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் நேற்று நடைபெற்ற கட்சி ஆலோசனை கூட்டத்தில் பேசிய அவரின் வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது.