ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சி உள்பட 46 பேர் போட்டியிடுகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் டிசம்பர் 14-ல் உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் காலியானதாக அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. பிப்ரவரி 8-ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த, ஜனவரி 10-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி முடிந்தது. இந்த தேர்தலில் அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக ஆகிய கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்துள்ளன. இதனால் திமுக, சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்களுடன் சுயேட்சைகளும் சேர்த்து மொத்தம் 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
வேட்பு மனு வாபஸ் பெறும் காலக்கெடு நேற்று பிற்பகல் 3 மணியுடன் முடிந்தது. 8 சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். இதையடுத்து, தேர்தல் களத்தில் திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட மொத்தம் 47 பேர் வேட்பாளர்களாக களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் வெளியிட்டுள்ளார்.
இதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக, நாம் தமிழர் கட்சி உட்பட 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் பத்மாவதி மனு தாக்கல் செய்திருந்தார். வெளிமாநில வேட்பாளர் தேர்தலில் போட்டியிடுவதற்கு, சுயேட்சை வேட்பாளர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். இதனால் பத்மாவதியின் மனு கடைசி நேரத்தில் நிராகரிக்கப்பட்டது- இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 47ல் இருந்து 46ஆக குறைந்துள்ளது.