தந்தை பெரியாரை அவதூறு செய்ததாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை ஆயிரக்கணக்கான தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூரில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது ‘தமிழ் ஒரு சனியன்’ என தந்தை பெரியார் பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்தார். அவரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், சென்னை நீலாங்கரை பகுதியில் உள்ள சீமானின் வீட்டை தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இன்று காலை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு திரண்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சீமானை கண்டித்து முழக்கமிட்டதுடன், அவரது படத்தை செருப்பால் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சீமான் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தந்தை பெரியார் திராவிட கழகத்தினரை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.