திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததற்காக காரணத்தை மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ்வர் கூறியுள்ளார்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 10-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை பத்து நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும். இதன் வழியே பிரவேசம் செய்து, ஏழுமலையானை வழிபட தேவையான இலவச தரிசன டோக்கன்களை வழங்க 8 இடங்களிலும், திருப்பதி மலையில் 1 இடத்திலும் தேவஸ்தானம் நிர்வாகம் கவுண்டர்களை திறந்திருந்தது. அந்த கவுண்டர்களில் இன்று அதிகாலை 5 மணி முதல் இம்மாதம் 10, 11, 12 ஆகிய நாட்களில் இலவச டோக்கன் வழங்கப்பட இருந்தது.
இந்த நிலையில் இன்று அதிகாலை வழங்கப்பட இருந்த டோக்கன்களை வாங்க, நேற்று மதியம் முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கவுண்டர்களில் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் திடீரென மெயின் கேட் திறந்து விடப்பட்டது. இதனால் பக்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு உள்ளே செல்ல முயன்றதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 34 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திருப்பதி மாவட்ட ஆட்சியர்வெங்கடேஷ்வர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பைராகிபட்டுடடையில் அமைக்கப்பட்டுள்ள கவுண்டரில் பணியில் இருந்தவர்கள், மெயின் கேட்டை திடீரென்று திறந்து விட்டுள்ளனர். இதன் காரணமாக பக்தர்கள் ஒரே நேரத்தில் போட்டி போட்டு கொண்டு உள்ளே செல்ல முயன்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது.
எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் கேட்டை திறந்து விட்ட போலீஸ் டிஎஸ்பி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்தில் மொத்தம் 40 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஆறு பேர் மரணம் அடைந்து விட்டனர். மீதமுள்ள 34 பேரில் ஆறு பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெறுகின்றனர். மரணம் அடைந்த ஆறு பேரில் சேலத்தை சேர்ந்த பெண் எனத் தெரிய வந்துள்ளது. மற்றவர்களை அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது” என்றார்.








