திருப்பதியில் நெரிசலில் சிக்கி 6 பேர் பலியானதற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
வைகுண்ட ஏகாதசி பண்டிகைக்கான சொர்க்கவாசல் திறப்பையொட்டி திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் விநியோகம் நேற்று செய்யப்பட்டது.
இந்த இலவச தரிசன டோக்கனை வாங்குவதற்காக பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி சேலத்தைச் சேர்ந்த மல்லிகா உள்பட 6 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திருப்பதி என்று வருகிறார் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் எக்ஸ் வலைதளத்தில் இரங்கல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஆந்திர பிரதேசத்தின் திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் வேதனை அடைந்தேன். எனது எண்ணங்கள் நெருங்கிய மற்றும் அன்பானவர்களை இழந்தவர்களுடன் உள்ளன. காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆந்திர அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது என பதிவிட்டுள்ளது.








