மதுரையில் 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் போடப்பட்ட புதிய சாலை பொங்கலுக்கு திறப்பு விழா காண்பதற்கு முன்பே விரிசல் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மேற்கு மண்டலம் 5-ல் தென்கால் கண்மாயில் உள்ளது. இந்த கண்மாயை நம்பி ஏராளமான விவசாயிகள் பாசன வசதி பெறுகின்றனர். இந்த கண்மாயை நம்பி அவனியாபுரம், அயன் பாப்பாக்குடி உள்ளிட்ட பல்வேறு கண்மாய்கள் பலன் அடைந்து வருகிறது. இந்த நிலையில் கண்மாய் கரையானது மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகர் பகுதியில் இருந்து திருப்பரங்குன்றம் மூலக்கரை மற்றும் விளாச்சேரி வரை உள்ளது.
இந்த கண்மாய் கரைக்கு மேல் சிறப்பு சாலை திட்டத்தின் கீழ், புதிய சாலை அமைப்பதற்கு ஒப்பந்த உடன்படிக்கை போடப்பட்டு ரூ.37.10 கோடி மதிப்பீட்டில் மாநில, நெடுஞ்சாலைத்துறை பணிகள் தொடங்கியது. பணிகள் ஆரம்பிக்கும் போது கண்மாய் ஓரங்களில் இருந்த அனைத்து மரங்களும் வெட்டப்பட்டன. இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
அதன் பின்னர் அரசு தரப்பில் கண்மாய்க்கு எவ்வித இடையூறும் இல்லாமல் அடுத்தடுத்த சாலை அமைக்கப்படும் என ஒப்புதல் பெற்று பணிகள் தொடங்கியது. சாலை பணிகள் தொடங்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆகிய நிலையில் தற்போது பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டு சாலைகள் போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாலைகள் போடப்பட்டு 2 மாதங்களே ஆன நிலையில் மக்கள் பயன்பாட்டுக்கு வராத சாலையில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. விரிசல் ஏற்பட்ட இடங்களில் ஆங்காங்கே பேட்ஜ் ஒர்க் செய்யப்பட்டுள்ளது. சுமார் 600 மீட்டர் தொலைவுக்கு ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சம்மந்தப்பட்ட நெடுச்சாலை துறை அதிகாரிகளுடன் பேசிய போது: தென்கால் கண்மாய் கரையில் போடப்பட்ட புதிய சாலையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக மண்ணில் அரிப்பு ஏற்பட்டு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் மட்டும் தான் விரிசல் ஏற்பட்டது. சாலை பொங்கல் பண்டிகைக்கு திறப்பு விழா காணப்பட உள்ளது. சாலை பணிகள் முழுவதும் முடிவடைந்து நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்தனர்.
பொங்கலுக்கு திறப்பு விழா காண உள்ள நிலையில், மதுரையில் ரூ.37.10 கோடிக்கு போடப்பட்ட சாலை பயன்பாட்டுக்கு வராமலேயே விரிசல் ஏற்பட்ட சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
சாலை திறப்பு விழாவிற்கு முன்பே சேதமடைந்துள்ள நிலையில், பணிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதா என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.